கோலாலம்பூர், ஜூலை 31 – இனவாதத்தை தூண்டும் படியாகப் பேசிய இடைநிலைப் பள்ளி தலைமையாசிரியை மீது கல்வி அமைச்சு விசாரணை நடத்தும் என்று துணை அமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் கல்வி அமைச்சின் பார்வைக்கு வந்திருப்பதாகவும் இது குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும் மலேசியா கினி இணையத்தளத்திற்கு கமலநாதன் தகவல் அனுப்பியுள்ளார்.
“இது போன்ற இனவாதப் போக்கை நாம் மன்னிக்கமுடியாது. இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கமலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கெராக்கான் உதவித்தலைவர் ஏ.கோகிலன் பிள்ளை இது குறித்து கருத்து கூறுகையில், தலைமையாசிரியை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் அவரை உடனடியாக வேலை நீக்கம் செய்ய வேண்டும் என்றும், இவ்விவகாரத்தை இப்படியே கவனிக்காமல் விட்டால் அரசு ஊழியர்களிடமும், ஆசிரியர்களிடமும் வளர்ந்துள்ள இனவாதம் அபாயகரமான நிலைக்குச் சென்றுவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஷா ஆலம் ம.இ.கா பிரிவு துணைத்தலைவரான ஏ.பிரகாஷ் ராவ் (படம்) இவ்விவகாரத்தை கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சத்தமிட்ட மாணவர்கள் அனைவரையும் (மலாய் மாணவர்கள் உட்பட) தலைமையாசிரியை திட்டியுள்ளார். இருப்பினும் அவர் தனது கட்டுப்பாட்டை இழந்து இஸ்லாம் அல்லாத மாணவர்களை நோக்கி இந்தியாவிற்கு செல்லுங்கள், சீனாவிற்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்” என்று பிரகாஷ் ராவ் குறிப்பிட்டுள்ளார்.