ஆகஸ்ட் 5 – பூச்சோங் ஓல்டு டவுன் காபி ஷாப், நேரம் மாலை 7 மணி, என் எதிரே மலேசிய திரைத்துறையை தங்கள் தனித்திறமைகளால் கலக்கிக் கொண்டிருக்கும் இளம் ஜோடி டேனிஸ் மற்றும் விமலா அமர்ந்திருந்தனர்.
நேர்காணல் செய்வதற்குத் தேவையான அனைத்து கேள்விகளையும் முன்பே தயாராக என் மூளையில் சேமித்து வைத்திருந்தேன். இருப்பினும் டேனிஸ், விமலாவோடு பேசத்தொடங்கிய போது அது ஒரு நேர்காணல் போல் அல்லாமல் ஒரு இயல்பான நண்பர்களின் சந்திப்பை போலவே நடந்தது. அதற்கு காரணம் உண்டு அதை நேர்காணலின் கடைசியில் கூறுகிறேன்.
தங்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வீடு புரோடக்சன்ஸ் மூலம் ‘வெட்டி பசங்க’ என்ற திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி, அதை வெளியிடுவதற்கான வேலைகளில் இருவரும் மிகவும் பரபரப்பாக இருந்தனர்.
குறிப்பாக ‘வெட்டி பசங்க’ பாடல்கள் தற்போது மலேசிய முழுவதும் வெளியிடப்பட்டு வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கு முன்பு விமலா இயக்கத்தில், டேனிஸ் நடிப்பில் வெளிவந்த ‘விளையாட்டு பசங்க’ திரைப்படத்தை விட தற்போது வெளியிடவிருக்கும் ‘வெட்டி பசங்க’ திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த அளவிற்கு வெட்டி பசங்க முன்னோட்டத்திற்கு முகநூலிலும், சமூக வளைத்தளங்களிலும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிகின்றன.
அதே உற்சாகத்தோடு டேனிஸ் மற்றும் விமலாவோடு நான் பேசிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ…
செல்லியல்: வணக்கம் டேனிஸ், விமலா.. வெட்டி பசங்க பட வேலைகள் எந்த அளவில் இருக்கிறது?
டேனிஸ் : பட வேலைகள் எல்லாம் முடிந்து வெளியிடுவதற்கு தயாராக இருக்கிறது. 30 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். செப்டம்பர் மாதம் இறுதிக்குள் படத்தை வெளியிட்டுவிடுவோம்.
விமலா: ‘விளையாட்டு பசங்க’ படத்திற்கு ரசிகர்கள் தந்த மிகப் பெரிய வரவேற்பு தான் ‘வெட்டி பசங்க’ படம் உருவாகக் காரணமாக அமைந்தது. இந்த படத்திற்கும் மலேசிய மக்கள் மிகப்பெரிய ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
உங்க படங்களில் பாடல்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதே? அதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறதா?
டேனிஸ்: திலீப் வர்மனின் பாடல்கள் விமலாவுக்கு மிகவும் பிடிக்கும். அதுமட்டுமின்றி ஒரு படம் இயக்கும் போது, அப்படத்தில் பலருக்கும் ஏதாவது ஒருவகையில் அவர்களது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும். அதனால் தான் வெட்டிப்பசங்க திரைப்படத்தில் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.
விமலா: டேனிஸ் சொல்வது போல் ஒரு படம் வெற்றியடைய அப்படத்தில் பணிபுரியும் அனைவரின் ஒத்துழைப்பும், திறமையும் அவசியம். அதோடு, கதைக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்களை வைப்பதில் எனக்கு தனிப்பட்ட ஆர்வம் உள்ளது.
செல்லியல்: விமலா உங்ககிட்ட ஒரு கேள்வி, டேனிஸை வச்சு படம் இயக்கும் போது எப்படி இருந்தது அந்த அனுபவம்?
விமலா: (சிரிக்கிறார்) இது எல்லோரும் எங்கிட்ட கேட்கும் கேள்வி தான். டேனிஸை வச்சு படம் இயக்குறது எனக்கு ரொம்பவே சுலபமான வேலை. ஏன்னா… ஒரு சில காட்சிகள் சரியா வரலைன்னா கூட மீண்டும் மீண்டும் நடிக்க வைத்து அந்த காட்சிகளை சரியா எடுத்துருவேன். என்ன…(டேனிஸை பார்க்கிறார்).. ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் படபடப்பா இருக்கும். ஆனால் என்னப் பொறுத்த வரைக்கும் எனது படங்களில் ரொமான்ஸ் காட்சிகள் ரொம்ப நாகரீகமா குடும்பத்தோடு பாக்குற மாதிரி தான் இருக்கும். எதிர்காலத்துல எங்க மகள் கூட அந்த காட்சிகளை பார்க்கலாம் அப்படிதான் காட்சிகள் இருக்கும்.
டேனிஸ்: கேமராவுக்கு முன்னாடி வந்திட்டா தான் நாங்க எல்லாரும் நடிகர்கள். மற்றபடி படத்துல நடிச்ச எங்க டீம் எல்லாருமே எங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் தான். ஒரே குடும்பமாகத் தான் பழகுவோம்.
செல்லியல்: டேனிஸ் உங்கிட்ட ஒரு கேள்வி, இந்த படம் இயக்கும் போது நடந்த ஏதாவது சுவாரஸ்மான விஷயங்கள் சொல்லுங்களேன்?
டேனிஸ்: அதை ஏன் கேக்குறீங்க.. படத்துல ஒரு சுடுகாடு காட்சி இருக்கு. விமலாவுக்கு பேய்,பூதம் இவற்றில் கொஞ்சம் நம்பிக்கை அதிகம். அதனால் சுடுகாட்டுல வச்சு படம் எடுக்க ரொம்பவே பயந்தாங்க. இருந்தாலும் படத்துக்கு அந்த சுடுகாடு காட்சி ரொம்பவே அவசியம். அதனால் அவங்களுக்கு பாதுகாப்பா நாலு பேர கூடவே இருக்க வச்சு அந்த காட்சிகளைப் படமாக்கினோம். அதுக்குப்பிறகு விமலாவுக்கு பேய், பூதத்தின் மேல் இருந்த பயம் கொஞ்சம் குறைஞ்சிருக்குன்னு நினைக்கிறேன்…(என்று சொல்லிவிட்டு விமலாவைப் பார்க்கிறார்)
செல்லியல்: விளையாட்டு பசங்க, வெட்டி பசங்க வித்தியாசம் என்ன?
விமலா: இரண்டுமே நம்ம வாழ்க்கைல நடக்குற எதார்த்தங்களை சொல்ற படம் தான். அதுல அன்பு, பாசம், காதல், நட்பு எல்லாமே இருக்கும். வெட்டிப்பசங்க படம் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை சொல்லும் ஒரு படம். இந்த படத்தை பார்க்குறவங்க எல்லோருக்கும் அதில் ஏதாவது ஒரு நிகழ்வு அவங்க வாழ்க்கையில் நடந்தது போல் இருக்கும்.
செல்லியல்: இப்போது நிறைய மலேசியப் படங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. இனி மலேசியப் படங்களுக்கு விமர்சனம் எழுதலாமா? நியாயமாக பத்திரிக்கைகள் எழுதும் விமர்சனங்களை அதன் இயக்குநர்களோ, நடிகர்களோ ஏற்றுக்கொள்வார்களா? அது பற்றி உங்கள் கருத்து என்ன?
டேனிஸ்: என்னைப் பொறுத்தவரைக்கும் இது போன்ற விமர்சனங்கள் கட்டாயம் தேவை. அப்போது தான் மலேசிய திரைப்படங்களின் தவறுகள் அனைத்தும் திருத்தப்பட்டு அதன் தரம் உயரும். என்னுடைய தனிப்பட்ட ஒரு அனுபவத்தை சொல்கிறேன். நான் தமிழ் பள்ளியில் படிக்கவில்லை ஆனாலும் என்னால் தமிழில் ஓரளவிற்கு பேச முடியும். ஆஸ்ட்ரோவில் நான் முதன் முதலில் நிகழ்ச்சி செய்யும் போது, எனது தமிழைப் பார்த்து நிறைய பேர் கேலி செய்தார்கள். இவனெல்லாம் எதற்காக நிகழ்ச்சி நடத்த வருகிறான் என்று என் காது படவே பேசினார்கள். அப்போது எனக்குள் ஏற்பட்ட தாக்கத்தால் தமிழை மேலும் மேலும் கற்று என்னை வளர்த்துக்கொண்டேன். அது மாதிரி நம் மீது உள்ள தவறுகளை அடுத்தவர் சுட்டிக்காட்டும் போது தான் நம்மை நாம் திருத்திக்கொள்ள முடியும்.
ஆனால் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இந்தியப் படங்களுடன் ஒப்பிட்டு மலேசியப் படங்களின் விமர்சனங்களை எழுத வேண்டாம். காரணம் இந்திய சினிமா 100 ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் மலேசியப் படங்கள் இப்போது தான் வளர்ந்து வருகின்றன. அதை மனதில் வைத்து பத்திரிக்கைகள் நியாயமான விமர்சனங்களை எழுதலாம் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.
செல்லியல்: விளையாட்டு பசங்க காதலை சொல்லியது, வெட்டிப்பசங்க இளைஞர்களின் வாழ்க்கையை சொல்கிறது.. உங்களின் அடுத்த படைப்பு என்னவாக இருக்கும்?
விமலா: எங்களின் அடுத்த படைப்பு பத்தி இப்போது கொஞ்சம் யோசிச்சு வச்சுருக்கோம். படத்தோட தலைப்பு கூட யோசிச்சாச்சு… (இருவரும் ஒன்றாக சேர்ந்து சொல்கிறார்கள்) எங்களின் அடுத்த படைப்பு “முரட்டு பசங்க”
செல்லியல்: செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் வெட்டிப்பசங்க படம் மாபெரும் வெற்றி பெற்று உங்களின் படங்களுக்கு மேலும் மேலும் வரவேற்பு கூடுவதற்கு செல்லியலின் சார்பாக எனது வாழ்த்துக்கள் டேனிஸ், விமலா..
டேனிஸ்: செல்லியலுக்கு ரொம்ப நன்றி ..உங்களைப் போன்று பத்திரிக்கைகள் தான் மலேசிய சினிமாக்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன. உங்களின் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை..
விமலா: செல்லியலுக்கு எனது நன்றிகள்… படம் வெளியிடும் போது கட்டாயம் கூப்பிடுகிறோம்…
இனிமையாக அமைந்த அந்த மாலை நேர சந்திப்பில், டேனிஸ், விமலாவோடு பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான விஷயங்களைக் கூறினேன். இந்த சந்திப்பு மிகவும் நட்பான முறையில் அமைந்ததற்குக் காரணம் ‘வெட்டிப்பசங்க’ திரைப்படம் இயக்கும் போது அதில் இரண்டு நாட்கள் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஷான் என்னை உதவிக்கு அழைத்திருந்தார்.
இதைப் பற்றி நேர்காணலின் ஆரம்பத்திலேயே டேனிஸ், விமலாவிடம் கூறிவிட்டேன். மிகவும் ஆச்சர்யப்பட்ட அவர்கள் நேர்காணல் என்பதை மறந்து தங்களது குழுவில் ஒருவராக என்னை நினைத்துக்கொண்டு பேசியதால் எல்லாம் இனிதே அமைந்தது.
– பீனிக்ஸ்தாசன்
வெட்டி பசங்க முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணைய தொடர்பின் வழி காணலாம்