ஆக. 13- ஈரோடு வ.உ.சி. பூங்காவில் நடந்த புத்தகத் திருவிழாவில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ராஜேஷ், நாசர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நடிகர் நாசர் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு அமெரிக்கா அரசு கொடுக்கும் விருதுதான் ஆஸ்கார் விருது. வெளிநாட்டை சேர்ந்த சினிமா நடிகர்கள் யாராவது தனக்கு இந்திய நாட்டின் விருது கிடைக்கவில்லை என்று கூறுகிறார்களா? இல்லையே. பிறகு ஏன் நாம் ஆஸ்கார் விருதுக்கு ஆசைப்பட வேண்டும். கவலைப்பட வேண்டும்.
சினிமாவின்போக்கை மாற்றி அமைத்தவர் சிவாஜி கணேசன். அவருக்கே சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லை. தற்போது நடிப்பு பற்றி 4 ஆண்டுகளாக ஒரு புத்தகம் எழுதி வருகிறேன். இது நாளைய சமுதாயம் பயன்பெறும் வகையில் இருக்கும்.
ஒருமுறை இயக்குனர் பாலசந்தர் என்னை அழைத்து நாசர் என்ற பெயர் மிக சிறியதாக இருக்கிறது. பெயரை மாற்றிவிடலாமா? என்று கேட்டார். ரஜினி போன்றோருக்கு பெயர் வைத்து வாழவைத்த சிகரம் பாலசந்தர். ஆனால் அவரிடம் நான் என் பெற்றோர் ஆசையுடன் வைத்த பெயரை மாற்ற விரும்பவில்லை என்று தாழ்மையுடன் கூறினேன். இவ்வாறு அவர் கூறினார்.