கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 – சுங்கை பூலோ எஸ்கே ஸ்ரீ ப்ரிஸ்தனா பள்ளியில் குளியலறைக்கு அருகில் சிற்றுண்டி சாலை அமைத்த விவகாரத்தில் தலைமையாசிரியர் முகமட் நாசிர் முகமட் நோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும், அந்த பள்ளியில் பயிலும் குழந்தையின் பெற்றோர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் காவல்நிலையத்தில் அந்த பெற்றோரை தலைமையாசிரியர் அடையாளம் காட்டியதாக சுங்கை பூலோ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஜூனாய்டி பூஜாங் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞரின் ஆலோசனைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று ஜீனாய்டி கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 25 ஆம் தேதி தலைமையாசிரியர் அளித்த புகாரில், சம்பந்தப்பட்ட அந்த பெற்றோர் பள்ளிக்கு வந்து தன்னை மிரட்டியதாகவும், “நீங்கள் பள்ளிக்குள் பாதுக்காப்பாக இருக்கலாம். ஆனால் வெளியே வந்தால் அப்படி இருக்காது” என்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.கே ஸ்ரீ பிரிஸ்டினா பள்ளியில் பள்ளியில், ரமலான் மாதத்தின் போது இஸ்லாம் அல்லாத மாணவர்கள் குளியல் அறைக்கு அருகில் உணவருந்துவது போன்ற புகைப்படங்கள் முகநூல், டிவிட்டர் போன்ற பல்வேறு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.