கோலாலம்பூர், செப் 10 – குளியலறையை சிற்றுண்டி சாலை ஆக்கிய விவகாரத்தில் எஸ்கே ஸ்ரீபிரிஸ்டினா பள்ளியின் தலைமையாசிரியர் மன்னிப்புக் கேட்டதையடுத்து அந்த விவகாரம் சுமூகத் தீர்வுக்கு வந்தது என்று அனைவரும் நம்பிக்கொண்டிருந்த வேளையில் மீண்டும் அந்த விவகாரம் புகையத்தொடங்கியிருக்கிறது.
காரணம், மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படும் அந்த தலைமையாசிரியர் தான் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்று இன்று தெரிவித்துள்ளார்.
“நான் இவ்விவகாரம் தொடர்பாக யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை. ஏற்கனவே இதற்கு தீர்வு காணப்பட்டுவிட்டது” என்று கூறியுள்ளார் என்று ஸ்டார் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு சாரா இயக்கமான இந்திய முற்போக்கு சங்க (மிபாஸ்) தலைமைச் செயலாளர் எஸ்.பாரதிதாசன் கூறினார்.
ஆனால் தலைமையாசிரியர் தான் இதுவரை மன்னிப்பே கேட்கவில்லை என்று கூறியிருப்பதால் இவ்விவகாரம் மீண்டும் புகையத் தொடங்கியிருக்கிறது.