நியூயார்க், ஆக. 27- 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைவலிக்காக நிவாரணம் தேடி மருந்துக் கடைகளுக்கு வந்தவர்களுக்கு கடைக்காரர்கள் ஒரு ரகசிய பொருளை தண்ணீரில் கரைத்து தந்தனர்.
இதை சாப்பிட்ட பலருக்கு உடனடியாக தலைவலி பறந்தே போனது. அந்த ‘ரகசிய மருந்து’ தான் நாளடைவில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு ‘கோக்கோ கோலா’ என்ற வணிகப் பெயருடன் உலக நாடுகளில் உள்ள விற்பனை கூடங்களில் பிரபலமடைந்தது.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கோக்கோ கோலாவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் உச்சகட்ட பாதுகாப்புடன் 127 ஆண்டுகால பழமை வாய்ந்த கோக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் வைக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர், இந்த தயாரிப்பு ரகசியம் தொடர்பான குறிப்புகள் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை வெளியிடாமல் இருக்க ஒர் பெருந்தொகையை கோக்கோ கோலா நிறுவனம் தனக்கு தர வேண்டும் என்றும் ஒருவர் மிரட்டல் விடுத்தது நினைவிருக்கலாம்.
1886ம் ஆண்டு தொழில் முறையாக தொடங்கப்பட்ட அட்லாண்டாவில் உள்ள கோக்கோ கோலா நிறுவனம் 1910ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் பெரும் பாதிப்பை சந்தித்தது.
மெல்ல, மெல்ல அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு குளிர்பானங்களின் தயாரிப்பில் முடிசூடா மன்னனாக கோக்கோ கோலா இன்றளவும் திகழ்கிறது. உலகளாவிய அளவில் சிறந்த வர்த்தக அடையாளப் பெயராக 2011ம் ஆண்டு கோக்கோ கோலா தேர்வு செய்யப்பட்டது.
கோக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் எங்கோ ஓரிடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது என்பது பலரும் அறிந்த சங்கதிதான்.
ஆனால், அட்லாண்டாவில் உள்ள தொழிற்சாலையில் உச்சகட்ட லேசர் விளக்குகளின் பாதுகாப்பில் அந்த ரகசியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அந்த பாதுகாப்பு பெட்டகத்தை தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான கோக்கோ கோலா பிரியர்கள் கண்டு களைப்பு நீங்கி, களிப்படைந்து வருகின்றனர்.