கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 – பிரதமர் துறை துணையமைச்சரான பி.வேதமூர்த்தி அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்லுமாறு அமைச்சர்கள் யாரும் கூறினாலும் அவர் வெளியேற்றப்படமாட்டார் என்று ஹிண்ட்ராப் ஆலோசகர் என்.கணேசன் கூறியுள்ளார்.
“இந்த ஒரு விவகாரத்திற்காக வேதமூர்த்தி பதவி விலகமாட்டார். பொதுத்தேர்தலின் போது தேசிய முன்னணியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தொடர்ந்து இந்தியர்களுக்காகப் போராடுவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இதற்காகத் தானே அரசாங்கத்தில் இருக்கிறார். அமைச்சர்கள் அவரைப் பதவி விலகும் படி கூறுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை” என்றும் கணேசன் தெரிவித்துள்ளார்.
வேதமூர்த்தியைப் பதவி விலகுமாறு கூறுவதை விட அந்த அமைச்சர்கள் அவருடன் இணைந்து இந்திய மலேசிய மக்கள் சந்திக்கும் பிரச்சனையை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும் என்றும் கணேசன் கூறியுள்ளார்.
கடந்த வாரம் பினாங்கு மாநிலத்தில் 5 இந்திய இளைஞர்கள் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக வேதமூர்த்தி விடுத்த அறிக்கைக்கு எதிராக உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடியும், பாதுகாப்பு அமைச்சர் ஹிசாமுடினும், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதீனும் போர்கொடி தூக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.