கோலாலம்பூர், செப்டம்பர் 5 – தேசிய இலக்கியவாதியான சமட்டை தேடி காவல்துறை அவர் வீட்டிற்கு சென்ற போது, வீட்டிற்குப் பின்னால் ஓடி ஒளிந்து கொண்டதாகவும், வேறு வழியின்றி அவரை வலுக்கட்டாயமாக அந்த அதிகாலை வேளையில் விசாரணைக்காக அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் தேசிய காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறுயுள்ளார்.
“நாங்கள் மாலை சென்றோம். ஆனால் அவர் வீட்டில் இல்லை. நள்ளிரவில் தான் சமட் வீடு திரும்பினார். நாங்கள் காத்திருந்து அவரைக் கைது செய்தோம்” என்று இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் காலிட் தெரிவித்துள்ளார்.
மேலும், “அவரை விசாரணைக்கு உதவும் படி ஏற்கனவே கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர் ஒத்துழைக்கவில்லை. அதனால் அவரை அந்த அதிகாலை நேரத்திலும் கைது செய்வதைத் தவிர எங்களுக்கு வேறுவழியில்லை” என்று காலிட் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி டத்தாரான் மெர்டேக்கா என்ற இடத்தில் சாங் சாகா மலாயா கொடியை பறக்கவிட்ட விவகாரத்தில் தேசிய இலக்கியவாதியான சமட்டை நேற்று அதிகாலை காவல்துறை கைது செய்து, 2 மணி நேர விசாரணைக்குப் பின்னர் விடுவித்தது.
காவல்துறை சமட்டை அவ்வாறு கடுமையாக நடத்தியதற்கு பெர்சே இணைத்தலைவர் அம்பிகா கடும் கண்டனம் தெரிவித்தார்.