வாஷிங்டன், செப்.19- சிரியாவில் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் ஆசாத்தை பதவியில் இருந்து நீக்குவதே எனது நோக்கமாக இருக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா திட்டவட்டமாகக் கூறினார்.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக மூன்றாவது ஆண்டாக நடந்து வருகிற உள்நாட்டுப்போரை ஒடுக்குகிற வகையில், அரசு ஆதரவு படையினர் கடந்த மாதம் 21-ந் தேதி பேரழிவை ஏற்படுத்தும் ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தினர்.
இதில் 1400-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதில் அதிபர் ஆசாத்தை தண்டிக்கும் வகையில், சிரியாவின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தீவிரமாக இருந்தார். ஆனால் இந்த விஷயத்தில் சிரியாவின் ஆதரவு நாடான ரஷியா சமரச முயற்சி மேற்கொண்டது.
சிரியாவிடம் உள்ள பேரழிவை ஏற்படுத்தும் ரசாயன ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பு குழுவிடம் ஒப்படைக்க வைப்போம் என்று ரஷியா கூறியது. இதை ஒபாமா ஏற்றுக்கொண்டார்.
இதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரியும், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினர்.
ஆனால் இந்த உடன்படிக்கையில், வாக்குறுதி அளித்தபடி சிரியாவை ரசாயன ஆயுதங்களை கைவிடச் செய்வதற்கான வழிமுறைகள் வலிமையானதாக இல்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
இதற்கிடையே சிரியாவில் பேரழிவை ஏற்படுத்தும் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை ஐ.நா. சபை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
சிரியா வாக்குறுதி அளித்தபடி நடந்துகொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது தடைகள் விதிப்பது தொடர்பாக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வர மேற்கத்திய நாடுகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளன.இது தொடர்பான வரைவு தீர்மானத்தை பிரான்சும், இங்கிலாந்தும் ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கிற நாடுகளுக்கு அனுப்ப உள்ளன.
இந்த நிலையில் சிரியாவில் அதிபர் ஆசாத்தை ஆட்சியை விட்டு விரட்டுவதில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உறுதியாக உள்ளார். இது தொடர்பாக ஒபாமா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
சிரியாவில் ஆசாத் பதவியில் இருக்கிற வரையில், அங்கு உள்நாட்டுப்போர் முடிவுக்கு வரும் என்பதை கற்பனை செய்வதே கடினமான ஒன்று என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். சிரியாவில் ஆசாத்தை ஆட்சியிலிருந்து அகற்றுவதுதான் இன்னும் என்னுடைய நோக்கமாக இருக்கிறது.
அப்போதுதான் அங்கு மத சிறுபான்மையினரைப் பாதுகாக்க முடியும். மத வெறியர்கள் ஆதிக்கத்தை தடுக்க இயலும். அந்த வகையில் நாங்கள் எடுக்கிற முதலாவது நடவடிக்கைதான், சிரியாவின் ரசாயன ஆயுத விவகாரம் ஆகும்.
அடுத்தக்கட்ட நடவடிக்கை, சிரியா பிரச்சினையில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும், ரஷியா போன்ற சிரிய ஆதரவு நாடுகளையும் பங்கேற்க வைப்பதும்தான். இவ்வாறு ஒபாமா கூறினார்.