கோலாலம்பூர், அக் 9 – நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றம் செய்யப்பட்ட குற்றத்தடுப்பு சட்ட திருத்தத்தில் ( Prevention of Crime Act ) காவல்துறைக்கு சிறப்பு அதிகாரம் ஏதும் இல்லை என்று காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறியுள்ளார்.
இது குறித்து காலிட் மேலும் கூறுகையில், “உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்திற்கும் (Internal Security Act ) குற்றத்தடுப்பு சட்டத்திற்கும் அநேக வேறுபாடு உண்டு. குற்றத்தடுப்பு சட்டத்தின் படி அனைத்து அதிகாரங்களும் சட்டத்துறைக்கே உள்ளது”
“சந்தேகப்படும் நபர்களை 24 மணி நேரம் வரை கைது செய்து தடுப்பு வைப்பதற்கு மட்டுமே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. அதன் பின்னர் அடுத்த 21 நாட்களுக்கு தடுப்பு வைப்பதற்கு நீதிபதி ஆணை வழங்குவார். 38 நாட்கள் தடுத்து வைப்பதற்கு அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆணை வழங்குவார்.” என்று காலிட் கோலாலம்பூரில் நேற்று நடந்த நிகழ்வில் தெரிவித்தார்.
குற்றத்தடுப்பு சட்டம் திருத்தம் செய்யப்பட்டதற்கான முக்கியக் காரணம் குற்றங்களை ஒழிப்பது மட்டுமே என்றும் காலிட் குறிப்பிட்டார்.