கோலாலம்பூர், அக். 21- அம்னோ உதவித் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய டத்தோஸ்ரீ முகமட் அலி ருஸ்தாம் தனது தோல்விக்கு இப்போதும் சீனர்கள் தான் காரணம் என்று சொல்வாரா? என ஐ.செ.க.வின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேள்வியெழுப்பினார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற அம்னோ உதவித் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட அலி ருஸ்தாம் 7 தொகுதிகளின் ஆதரவை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார்.
நடந்து முடிந்த 13ஆவது பொதுத்தேர்தலில் மலாக்காவிலுள்ள புக்கிட் கட்டில் நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவிய அலி ருஸ்தாம் தனது தோல்விக்கு சீன சமுதாயம் தான் காரணம் என வெளிப்படையாக சாடினார்.
இந்நிலையில் அம்னோ உதவித்தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட அவருக்கு மலாக்காவிலுள்ள எந்தவொரு அம்னோ தொகுதியும் ஆதரவு அளிக்காததற்கும் சீனர்கள் தான் காரணம் என்று அலி ருஸ்தாம் கூறுவாரா? என லிம் கிட் சியாங் கேள்வியெழுப்பினார்.