Home 13வது பொதுத் தேர்தல் “2016 க்கு பிறகு எனது பதவிக்காலம் குறித்து இப்போது பேச வேண்டாம்” – செய்தியாளர் கேள்விக்கு...

“2016 க்கு பிறகு எனது பதவிக்காலம் குறித்து இப்போது பேச வேண்டாம்” – செய்தியாளர் கேள்விக்கு பழனிவேல் பதில்

576
0
SHARE
Ad

IMG_9693கோலாலம்பூர், அக் 25 – ம.இ.கா தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பிறகு கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பழனிவேல் அளித்த பதில்கள் பின்வருமாறு:-

கேள்வி: கூட்டரசுப் பிரதேசம், பெர்லிஸ் போன்ற மாநிலங்களில் மாநாடுகள் தள்ளிவைத்திருப்பதன் காரணம் என்ன?

#TamilSchoolmychoice

பழனிவேல்: மாநாடு தள்ளி வைக்கப்படவில்லை. தேதிகள் தான் இன்னும் நிர்ணயம் செய்யவில்லை. விரைவில் அதற்கான தேதிகள் அறிவிக்கப்படும்.

கேள்வி: துணைத் தலைவர் பதவிக்கு போட்டி வேண்டாம் என்று நீங்களே அறிவிக்கலாமே?

பழனிவேல்: துணைத் தலைவருக்குப் போட்டி இருக்காது. இது தொடர்பாக நான் பலமுறை அறிக்கை விடுத்துவிட்டேன்..

கேள்வி: பிரச்சாரங்களில் தேசியத் தலைவரின் ஆதரவின் பேரில் போட்டியிடுகிறோம் என்று வேட்பாளர்கள் கூறுவது பற்றி?

பழனிவேல்: மகளிர் அணியில் போட்டியிடும் டாக்டர் பிரேமாவும் அது போல் சொல்லுவார்கள். மோகனாவும் அதே போல் சொல்லுவார்கள். ஆனால் நான் யாரையும் ஆதரிக்கவில்லை. யார் போட்டியிடுகிறார்களோ அது அவரவர் சொந்த விருப்பம். மத்திய செயலவைக்கும் அதே நிலை தான். மத்திய செயலவைக்குப் போட்டியிடுகிறோம் என்று எனக்கு 144 குறுஞ்செய்திகள் வந்துள்ளன.

IMG_9713கேள்வி: மத்திய செயலவைக்குப் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியுமா?

பழனிவேல்: இல்லை. அது முடியாது. அதையெல்லாம் செய்தால் பிரச்சனையாகிவிடும். அநேகமாக ஒரு 30, 40 பேர் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

கேள்வி : பேஸ்புக்கில் ம.இ.கா மறுவடிவம் என்ற பெயரில் ஒரு பக்கம் உள்ளது. அதில் நடந்து முடிந்த ம.இ.கா தேர்தல் குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளதே?

பழனிவேல்: அதைப்பற்றியெல்லாம் நான் பொருட்படுத்த மாட்டேன். கட்சி தான் பலமாக இயங்கிக் கொண்டிருக்கிறதே. பிறகு என்ன? பேஸ்புக்கில் விமர்சனம் செய்பவர்கள் செய்யட்டும் அதுபற்றி பிரச்சனையில்லை.

கேள்வி: இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் நஜிப் கலந்து கொள்கிறார். ஆனால் பல தமிழர் அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதைப் பற்றி ம.இ.கா வின் நிலைப்பாடு என்ன?

பழனிவேல்: நேற்று தொலைக்காட்சியில் பார்த்தேன். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கே அது போன்ற போராட்டங்கள் ஒன்றும் நடைபெறவில்லை. இப்போது கட்சியைப் பற்றி மட்டும் பேசுவோம்.

கேள்வி: இன்னும் சில தொகுதிகளில் ம.இ.கா தேர்தல் நடைபெறாமல் இருப்பது குறித்து உங்கள் கருத்து?

பழனிவேல்: விரைவில் நடைபெறும். அதற்கான தேதிகள் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

கேள்வி: என்ன பிரச்சனையின் காரணமாக அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன? கைகலப்புகள் நடந்ததாகக் கூறுகிறார்களே?

பழனிவேல்: பிரச்சனையெல்லாம் ஒன்றும் இல்லை. கைகலப்புகள் நடந்ததாகக் கேள்விப்பட்டேன். ஆனால் நான் பார்க்கவில்லை. கட்சியில் ஜனநாயகம் தான் முக்கியம். ஒருசில தொகுதிகளில் இது போன்ற பிரச்சனைகள் நடப்பது இயல்பு தான்.

கேள்வி: மகளிர் அணியின் தேசியத் தலைவி பதவிக்கு போட்டி இருக்குமா?

பழனிவேல்: போட்டி இருக்கலாம். இல்லாமலும் போகலாம்.

IMG_9715கேள்வி: மத்திய செயலவைக்கு நியமனப் பதவிகள் இல்லை என்றும் கூறப்பட்டதே?

பழனிவேல்: நியமனப் பதவிகள் இருக்கின்றன. 9 பதவிகள் உள்ளன.

கேள்வி: அம்னோ தேர்தலில் உருமாற்றம் செய்வதற்கு தேவையான சில கோரிக்கைகள் பிரதமரிடம் வைக்கப்பட்டதே அதே போல் ம.இ.காவில் அடுத்த மூன்றாண்டுகளில் என்னவிதமான உருமாற்றங்கள் செய்யப்படும்?

பழனிவேல்: மாநிலத் தலைவருக்குத் தேர்தல் வைப்பது போன்று சட்டதிட்டங்களில் சில உருமாற்றங்கள் செய்வோம். ஆனால் முதலில் ம.இ.கா தேர்தல் முடிய வேண்டும். அதன்பிறகு ஒரு சட்டதிட்டக் குழுவை நியமித்து ஆலோசனை செய்து, வரும் 2014 ல் அல்லது 2015 ல் சட்டதிட்டங்களில் உருமாற்றங்கள் செய்வோம்.

கேள்வி: உங்களின் பதவிக்காலம் வரும் 2016 ஆம் ஆண்டோடு முடிவடையும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தீர்களே?

பழனிவேல்: அதுபற்றி நான் பிறகு யோசனை செய்கிறேன். இப்போது அது பற்றி பேசாதீர்கள்.

இவ்வாறு பழனிவேல் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார்.