கோலாலம்பூர், நவ 12 – இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் போகக்கூடாது என்று பக்காத்தான் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைப் போரில் கடந்த 20 வருடங்களாக அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசு இன்னும் மௌனம் காத்து வருகின்றது. எனவே நஜிப் துன் ரசாக் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் மலேசியா தனது எதிர்ப்பைக் காட்டுவது போல் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருக்கும் கனடா நாட்டுப் பிரதமர் ஸ்டீபன் கார்ப்பர் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் நஜிப்பும் இணைந்து கொண்டு இலங்கைக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் லிம் கூறியுள்ளார்.
இதனிடையே பிகேஆர் கட்சியின் சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஹாரி அப்துல் இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையைப் பார்வையிடச் சென்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து செனட்டர்கள், காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்குமாறு தங்கள் நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டினார்.