சென்னை, டிசம்பர் 6- இளைஞர்களுக்கு இசையை முழுமையாக கற்பிக்க வேண்டும் என்ற ஏ.ஆர்.ரகுமான், அமெரிக்காவில் இசை பள்ளி தொடங்க உள்ளதாக கூறினார். சமீபத்தில் நியூயார்க் நகரில் சர்வதேச இசை நிறுவனம் ஒன்றின் தூதராக பொறுப்பு ஏற்றார் ஏ.ஆர்.ரகுமான். அவர் வந்திருப்பதை அறிந்ததும் அப்பகுதி வாழ் இந்தியர்கள் ரகுமானை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பிறகு ரகுமான் ,“இந்திய மக்களின் இசை ஆர்வத்தின் பிரதிபலிப்பாகத்தான் நான் இசை பள்ளி தொடங்கினேன். இசையை முறைப்படி கற்பது எவ்வளவு அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இந்தியாவில் நான் நிறுவிய பள்ளியை போன்று துபாய், மலேசியா போன்ற நாடுகளிலும் நிறுவ ஆசைப்படுகிறேன்” என்றார்.
எதிர்காலத்தில் எனக்கு அமெரிக்காவில் இசை பள்ளி தொடங்க நேரம் கிடைக்குமாயின் நிச்சயம் ஆரம்பிப்பேன். பள்ளியை தொடங்கிவிட்டு அதை யாராவது பார்த்துக்கொள்ளட்டும் என்று யாரோ ஒருவர் பொறுப்பில் விட்டுச் செல்லமுடியாது. அதில் முழு ஈடுபாடு காட்ட வேண்டும்.
இசை பள்ளி ஒரு குடும்பம் போன்றது. அதில் சேர்பவர்கள் தன்னால் வளர்ந்து விடுவார்கள் என்று விட்டுவிட முடியாது. குடும்பத்தில் பிள்ளைகள் மீது அம்மா கவனம் செலுத்துவதுபோல் அவர்கள் மீதும் அக்கறை செலுத்த வேண்டும் என்று கூறினார்.