கோலாலம்பூர், டிச 7 – தயாஜியின் சர்சைக்குரிய “கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்” கதைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேஸ்புக்கில் குரல் கொடுத்து வருபவர்கள் பலர். அவர்களில் தனேஷ் பாலகிருஷ்ணன்(படம்) என்பவர் தனது “குறிஞ்சித்திணை” என்ற தனது வலைத்தளத்தில் அக்கதை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரது விமர்சனம் பின்வருமாறு:-
“சமீபத்தில் தயாஜி கைவண்ணத்தில் மலர்ந்த “கழிப்பறையும், பழிவாங்கும் முறையும்” வல்லினத்தில் பிரசுரமாகியது. முழுவதையும் பொறுமையுடன் வாசித்தேன். என் வாசிப்பில் முழுக்க முழுக்க சிறுநீராகவே துர்நாற்றம் வீசியதே தவிர, அவர்கள் கூறுவது போல் அதில் பொதிந்திருக்கும் இலக்கிய நயம் புலப்படவில்லை. நாட்டில் இளம் எழுத்தாளர்களில் நான் அதி மதிப்புக்குரியவராக அமைந்த அவரின் எழுத்து இன்று ஏன் இந்த நிலைப்பாடு எனக்கு தெரியவில்லை. அதையும் ஆதரித்து இன்று வல்லினம் ஆசிரியர் ம.நவீன் விவாதிப்பது முற்றிலும் வாசகராகிய எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.”
“ஆசிரியர் ம.நவீன் காதல் எனும் மாத சஞ்சிகை எழுதத் தொடங்கிய காலம் முதல் அவரின் எழுத்துகளை மட்டுமில்லாமல் வல்லினம் குழுமத்தின் எழுத்துகளைப் பின் தொடர்ந்து வருகிறேன். வல்லினம் பல நல்ல எழுத்தாளர்களை உருவாக்க தளத்தை உருவாக்கி தந்தனர். முற்போக்குச் சிந்தனையாளராகவும் திகழ்ந்தனர். ஆனால், இன்று வல்லினம் “மஞ்சள் பத்திரிக்கையே” மிஞ்சி விட்டனர். கதை முழுக்க முழுக்க ஆபாசமே. யாரோ ஏதோ மஞ்சள் தளத்தில் எழுயிருந்தால் பரவாயில்லை, வல்லினத்தில் பிரசுரித்திருப்பதில் தான் இங்கு வாசகர் மத்தியில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.”
“அதுமட்டுமில்லாமல், வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் கடப்பாடும் வல்லினம் ஆசிரியருக்கு உண்டு அதை நான் மறுக்கவில்லை. ஆனால், ஆசிரியர் பதிலளித்த முறை தவறே என கூறுகிறேன். வாசகர்களை மடையர்கள் எனக் கூறுவது, வாசகர்கள் விடும் குசுக்களுக்கெல்லாம் பதிலளிக்கமுடியாது எனக் கூறுவது மரியாதையற்ற செயலாக கருதுகிறேன். இவரை போல் அகங்காரம் கொண்ட 100 பேர் உருவாகிவிட்டால் போதும் பிறகு நான் சொல்லவேண்டியதில்லை, உங்களுக்கெ தெரியும்.”
“ஆசிரியர் கவனத்திற்கு, வாசகன் ஒருவன் இல்லையென்றால் உங்கள் எழுத்தை ஐந்தறிவு படைத்த மிருகம் கூட சீண்டாது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். எப்படி ஒரு கதையை வெளியிடுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறதோ, அதேபோன்று கேள்வி கேட்பதற்கும் எங்களுக்கும் உரிமை இருக்கிறது என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள். அதற்கு பதிலளிப்பதை விடுத்து மடையன், குசு என்று மிக மட்டமான வார்த்தைகளை வெளியிடுவது நன்றல்ல. நாளை இதை தான் சமுதாயம் பின்பற்றும்.”
“இந்தக் கதையை ஆதரித்து பேசுபவர் நீங்கள் ஒருவர் மட்டுமே என்பதனை மறந்து விடாதீர்கள். இதுவரை வல்லினம் குழுமத்திலிருந்து ஒருவரும் ஆதரித்து பேசியதாக எங்குமே நாங்கள் காணவில்லை. வல்லினம் குழுமத்தின் நிலைப்பாடுதான் என்ன?”
“படைப்பிலக்கியத்திற்கு வெற்றி என மார்தட்டிக் கொள்ளாமல், அமைதியான முறையில் சிந்தியுங்கள். மேற்கத்திய சிந்தனை நமது கலாச்சாரத்தோடு என்றும் இணையாது என்பதனை மறந்து விடாதீர்கள். வள்ளுவனை விட எந்த ஞானியும் பிறக்கவில்லை. நீங்கள் செய்யும் தவறுகளுக்கு வள்ளுவன், ஔவை, ஆண்டாள் அவர்களை இழுக்காதீர்கள். உங்கள் நம்பிக்கை பற்றி யாரும் விமர்சிக்கவில்லை. அதே போல் மற்றவர்களின் நம்பிக்கைகளை விமர்சிப்பது உங்களுக்கு உரிமையில்லை என்பதனை தெரிவிக்கின்றேன்.”