பிப்ரவரி 12 – “முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மலேசிய மக்களுக்கு எதிராகப் போர் தொடுப்பதை நிறுத்த அவருக்குப் பிரதமர் நஜிப் அறிவுறுத்த வேண்டும். அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கை, அம்பிகாவுக்கு மட்டும் விடப்பட்ட மிரட்டல் அல்ல! மாறாக, இந்நாட்டு மக்களின் சட்டபூர்வத் தேவைகளுக்குக் குரல் கொடுக்கும் மலாய்க்காரர்கள் அல்லாத அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும்” என கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
“இந்நாட்டில் வாழும் மற்ற இனத்தவர்களைப் பிராஜா உரிமைக்குத் தகுதியற்றவர்கள் என்று கூறியுள்ள துன் டாக்டர் மகாதீர், இப்பொழுது விடுத்துள்ள அறிக்கை இந்நாட்டில் நீதிக்காகக் குரல் கொடுக்க மற்ற இனங்களுக்கு உரிமையில்லை என்ற அவரின் கருத்தை மறு உறுதிப்படுத்துவதாக உள்ளது” என்று அவர் இன்று பத்திரிக்கைகளுக்கு விடுத்த அறிக்கையொன்றில் மேலும் கூறினார்.
“இது மிக ஆபத்தான வழிமுறை, இது பிரஜைகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் ஒரு பிற்போக்கு செயலாகும். இது போன்ற அவரின் பல அறிக்கைகள் நீதிக்கு எதிரானதாகவும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் அறிக்கைகளாகவும் இருக்கின்றன. பல இன மக்கள் வாழும் இந்நாட்டின் வளப்பத்திற்கும், முன்னேற்றத்திற்கும், அமைதிக்கும் சவாலான அறிக்கைகளை விட்டு மக்களின் பொறுமையை மகாதீர் சோதிக்கக் கூடாது” என்றும் சேவியர் கூறினார்.
“நீண்டகாலம் சேவையாற்றிய ஒரு முன்னாள் பிரதமரான அவர் இப்படிக் குறுகிய இன மனப்பான்மை அரசியல் உணர்வுடன் பல விவகாரங்களின் மீது கருத்து தெரிவிப்பதை அம்னோ கண்டு கொள்ளாமலிருப்பது, அக்கட்சி அதன் கொள்கைகளை மகாதீர் மூலம் இளம் மலாய்க்காரர்களிடம் பரப்பி ஒரு தீவிரவாதப் பிரிவினரை வளர்த்து வருவதாக எண்ணத் தோன்றுகிறது”
“அதற்குச் சான்றாக, பல இனச் சமுதாயத்தினர் நீதியான தேர்தல் வேண்டிக் கோரிக்கை விடுத்துள்ள போது பெர்சே தலைவர் அம்பிகாவை மட்டும் தனிமைப்படுத்தி அவரின் வீட்டு முன் நடத்தப்பட்ட பிட்டத்தை ஆட்டும் போராட்டம், கோவில்கள் கட்ட எழுப்பப்படும் ஆட்சேபங்கள், கிருஸ்துவ வழிப்பாட்டு தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பைபிளை எரிப்போம் என்ற இப்ராஹிம் அலியின் மிரட்டல்கள் குறித்து எல்லாம் மக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டிய ஒரு முன்னாள் பிரதமர், அக்குழுவினரின் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கும் ரீதியில் பேசி வருகிறார்” என்றும் தனது அறிக்கையில் சேவியர் குறிப்பிட்டுள்ளார்.
“மேலும், இந்நாட்டு சுதந்திரத்துக்கு முன் இங்கு பிறந்து, வளர்ந்த, நாட்டு மேம்பாட்டுக்கும் சுதந்திரத்துக்கும் போராடிய இந்தியச் சீன மக்களுக்குப் பிரஜா உரிமை வழங்கியது தவறு என்றும், சபாவில் ஓட்டுக்காக அன்னியர்களுக்குக் குடியுரிமை வழங்கிய தனது செயலை நியாயப்படுத்தியும் வரும் மகாதீர், வரும் தேர்தலில் பாரிசானுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கொடுத்தால் டத்தோ அம்பிகாவின் பிரஜா உரிமை பறிக்கப்படும் என்று பேசிவருகிறார். இது போன்ற அறிக்கைகள், இந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைக்கு அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் மற்ற இனங்களின் தலைவர்களின் உரிமைகளை மிரட்டிப் பறிப்பதாகும்”
“தனது பதவிக் காலத்தில் சட்ட விரோதமாக இலட்சக் கணக்கான அன்னியர்களுக்குக் குடியுரிமை கொடுத்து அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தவர், தனது சொந்தப் பூர்வீகத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தும், அவர் மற்றவர்களின் குடியுரிமை தகுதிகள் குறித்துக் கேள்வி எழுப்பி வருகிறார்.
“இவரின் கைப்பாவையாக மலேசியாவின் எந்த அரசும் ஆகிவிடக்கூடாது, மலாய்க்காரர்கள் அல்லாதவர் விவகாரங்களில் இன்று அவர் வெளியிட்டு வரும் கருத்துகளும், அவர் ஆதரித்துவரும் சிறு தீவிரவாதக் கும்பல்களின் செயலையும் நாம் கண்டிக்கத் தவறினால் நாம் நமது உரிமையை அடமானம் வைத்தவர்கள் ஆகிவிடுவோம்” என்றும் சேவியர் ஜெயக்குமார் தனது அறிக்கையில் தொடர்ந்து கூறியுள்ளார்.