Home 13வது பொதுத் தேர்தல் ம.சீ.ச.வின் புதிய தலைவர் யார்? இன்று மாலை 6 மணிக்குள் தேர்தல் முடிவுகள்!

ம.சீ.ச.வின் புதிய தலைவர் யார்? இன்று மாலை 6 மணிக்குள் தேர்தல் முடிவுகள்!

1079
0
SHARE
Ad

MCA-contestants-Sliderடிசம்பர் 21 – தேசிய முன்னணி கட்சிகளில் இந்த ஆண்டில் கடைசியாக தேர்தல் நடத்தும் கட்சியாகத் திகழும் மலேசிய சீனர் சங்கத்தின் (ம.சீ.ச) தேர்தல் முடிவுகள் இன்று மாலை 6 மணிக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மசீச தேசியத் தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளது. நடப்பு தேசியத் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய், முன்னாள் தேசியத் தலைவர் ஓங் தீ கியாட் மற்றும் கான் பிங் சியூ ஆகிய மூன்று தலைவர்கள் மோதும் தலைவர் பதவிக்கான போட்டியை நாடே எதிர்பார்த்திருக்கின்றது.

காரணம், யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் மசீசவை புதிய பாதையில், புதிய சிந்தனைகளோடு வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்பு நாடெங்கிலும் பரவியுள்ளது.

குறிப்பாக, மசீச தலைவர்கள் தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மீண்டும் இடம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

லியோவ்தான் தலைவர் பதவியைக் கைப்பற்றுவார் என அரசியல் வல்லுநர்கள் பலரும் ஆரூடம் கூறியுள்ளனர். இருப்பினும், பதவி விலகும் நடப்பு தேசியத் தலைவர் சுவா சோய் லெக், போட்டியிடும் மூன்று பேரில் யாரை ஆதரிக்கின்றாரோ அவரே வெல்வார் என்ற ஆரூடமும் மசீச வட்டாரங்களில் உலவி வருகின்றது.

முன்னாள் தலைவர் ஓங் தீ கியாட் மீண்டும் தேசியத் தலைவராக வருவதை பெரும்பாலான மசீசவினர் விரும்பவில்லை என்பதால் நடைபெறும் போட்டி லியோவ் மற்றும் கான் பிங் சியூவிற்கும் இடையில்தான் நிலவுகின்றது என்றும் இதில் பதவி விலகிச் செல்லும் சுவா சொய் லெக் இறுதி நேரத்தில் கான் பிங் சியூவை ஆதரிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. அப்படியே அவர் கான் பிங் சியூவை ஆதரித்தாலும் அதனால் லியோவ்வை அவர்களால் தோற்கடிக்க முடியுமா என்பதுதான் இப்போது மசீச வட்டாரங்களில் எழுப்பப்படும் கேள்வியாகும்.

இதற்கிடையில் நடந்து முடிந்த மசீச இளைஞர் பகுதித் தேர்தலில் வென்ற சோங் சின் வூன் லியோவ்வின் ஆதரவாளர் என்பதால், இளைஞர் பகுதித் தலைவர் தேர்தலின் முடிவுகளை முன்னோடியாக வைத்து லியோவ்தான் தேசியத் தலைவராக வெல்வார் என்றும் சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மசீசவின் தேசியத் தலைவர் பதவிக்கு மூவர் போட்டியிடும் வேளையில், தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு வீ கா சியோங், டோனால்ட் லிம் ஆகிய  இருவரும் போட்டியிடுகின்றனர். 4 உதவித் தலைவர்கள் பதவிக்கு 9 பேர் போட்டியிடுகின்றார்கள்.

25 மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தேர்தலில் 58 பேர் போட்டியிடுகின்றனர்.

இன்று காலை முதல் பேராளர்கள் மசீச தேர்தலில் வாக்களிக்கத் தொடங்கினர். இன்று மாலை 6 மணிக்குள்ளாக தேர்தலின் முடிவுகள் முழுமையாகத் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.