Home 13வது பொதுத் தேர்தல் மசீச தேர்தல் முடிவுகள் காட்டுவது என்ன? – ஒரு கண்ணோட்டம்

மசீச தேர்தல் முடிவுகள் காட்டுவது என்ன? – ஒரு கண்ணோட்டம்

1163
0
SHARE
Ad

MCA-contestants-Sliderடிசம்பர் 23 – கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த மலேசிய சீனர் சங்கத்தின் (ம.சீ.ச) தேர்தல் முடிவுகள் காட்டுகின்ற மிக முக்கியமான செய்தி அந்த கட்சி இன்னும் இரண்டாக பிளவு பட்டுக் கிடக்கின்றது என்பதுதான்.

#TamilSchoolmychoice

டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் தேசியத் தலைவராக வெற்றி பெற்றிருந்தாலும் – அவரது வெற்றி எதிர்பார்த்த ஒன்று என்றாலும் – 186 வாக்குகள் வித்தியாசத்தில்தான் அவர் வெற்றி பெற்றிருக்கின்றார். பதவி விலகிச் செல்லும் சுவா சொய் லெக் பலரும் எதிர்பார்த்தபடி தனது ஆதரவாளர்களை மற்றொரு போட்டியாளரான கான் பிங் சியூவிற்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்திருக்கின்றார் என்பதும் இதிலிருந்து தெளிவாகின்றது.

ஒரு வேளை இருமுனைப் போட்டியாக இருந்திருந்தால், ஓங் தீ கியாட்டுக்குக் கிடைத்த 160வாக்குகளும் லியோவ்விற்கே கிடைத்து அவரது பெரும்பான்மை மேலும் கூடுதலாகியிருக்கலாம்.

சுவா சொய் லெக் ஆதரவு இல்லாமல், வலுவான அரசியல் பின்னணியோ, பிரபல்யமோ இல்லாத கான் பிங் சியூ இறுதி நேரத்தில் போட்டிக்களத்தில் குதித்து ஏறத்தாழ சரி பாதி வாக்குளை – சுமார் 1,000 வாக்குகளை – பெற்றிருக்க முடியாது.

மற்றொரு கோணத்தில் பார்த்தால், ஏதோ ஒரு காரணத்தால், சரி பாதி பேராளர்கள் லியோவ்வின் தலைமைத்துவத்தை விரும்பவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.

இந்நிலையில், கட்சியில் ஒற்றுமை ஏற்படுத்துவதும், மறு சீரமைப்பு செய்வதும்தான் தங்களின் முதல் பணி என லியோவ்வும், துணைத் தலைவராக வெற்றி பெற்றிருக்கும் வீ கா சியோங்கும் அறைகூவல் விடுத்திருந்தாலும் அவர்களால் அவ்வாறு உண்மையிலேயே செய்ய முடியுமா – அதற்கு முன்னாள் தலைவர் சுவா சொய் லெக் ஆதரவு கொடுப்பாரா, அவரது ஆதரவு பலம் தொடர்ந்து கட்சியில் நிலை பெற்றிருக்குமா போன்ற கேள்விகளுக்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல முடியும்.

லியோவ் – வீ  கா சியோங்  நண்பர்கள் கூட்டணி

தேசியத் துணைத் தலைவராக வெற்றி பெற்றிருக்கும் வீ கா சியோங் லியோவ்வின் நீண்ட கால அரசியல் நண்பர். லியோவ் இளைஞர் பகுதித் தலைவராக இருந்த காலத்தில் அவருக்குத் துணையாக இளைஞர் பகுதியின் செயலாளராக பணியாற்றிய வீ ,  லியோவ்விற்குப் பின்னர் இளைஞர் பகுதியின் தலைவராக உயர்ந்தார்.

அந்த வகையில், வெற்றி பெற்றிருக்கும் தேசியத் தலைவர், துணைத் தலைவர் இருவருமே அரசியல் நண்பர்கள் என்ற முறையில் கட்சியில் தலைமைத்துவம் வலுவாக இருக்கும் என நம்பலாம்.

வீ அதிகமான வாக்குகள் பெற்று துணைத் தலைவராகியிருப்பது, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டொனால்ட் லிம் ஒரு வலுவான போட்டியாளர் அல்ல என்பதைக் காட்டியிருக்கின்றது. லியோவ்வின் பலமான ஆதரவும் வீக்கு இருந்த காரணத்தால், அவரால் அதிகமான வாக்குகள் பெற்று வெல்ல முடிந்திருக்கின்றது.

ஓங் தீ கியாட்டின் தோல்வி – மற்ற தலைவர்களுக்கு ஒரு பாடம்

Ong-tee-kiat பல அரசியல் பார்வையாளர்கள் கணித்ததைப் போன்று, முன்னாள் தேசியத் தலைவர் ஓங் தீ கியாட் பேராளர்களால் மோசமான முறையில் நிராகரிக்கப்பட்டிருக்கின்றார்.

தேசியத் தலைவர் பதவி கையில் கிடைத்தும், அதனை முறையாகப் பயன்படுத்தாமல் – பேராளர்களோடு தொடர்பு வைத்து தனது ஆதரவு பலத்தைப் பெருக்காமல், மோசமான தலைமைத்துவத்தை வழங்கினால் இறுதியில் என்ன நேரும் என்பதற்கு மற்ற கட்சிகளுக்கும் உணர்த்தும் உதாரண மனிதராக ஓங் தீ கியாட் திகழ்கின்றார்.

கடந்த முறை இழந்த பதவியை மீண்டும் பெற அவர் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இனி அவரால் மசீச அரசியலில் பிரகாசிக்க முடியாது.

தொடரும் சுவா சொய் லெக்கின் அரசியல் பலம்

தேர்தல் முடிவுகள் தெரிவித்திருக்கும் மற்றொரு முக்கியமான செய்தி சுவா சொய் லெக்கிற்கு கட்சியில் இருந்து வருகின்ற ஆதரவு தொடர்கின்றது என்பதுதான்.

அரசாங்கப் பதவிகள் எதுவும் இல்லாமல் – வீடியோ விவகாரத்தால் ஏற்பட்ட தீராத கறை அவர் மீது இருந்தாலும் – பதவியை விட்டு விலகிச் சென்றாலும் – தொடர்ந்து அவர் கட்சியில் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளார் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

Chua Soi Lekசுவாவின் ஆதரவின் மூலமாகத்தான் லியோவ்விற்கு எதிராக கான்னிற்கு 1,000 வாக்குகள் கிடைத்தன என்பது ஒரு புறமிருக்க, மத்திய செயலவை உறுப்பினர்களாக வென்றவர்களில் சுவாவின் ஆதரவாளர்கள் சுமார் 14 பேர் இருப்பதாக மசீச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதோடு, சுவாவின் புதல்வரும் லாபிஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சுவா தீ யோங் தேசிய உதவித் தலைவராக வெற்றி பெற்றுள்ளதும் சுவாவின் ஆதிக்கமும், அரசியல் பங்கும் தொடர்ந்து கட்சியில் நீடிக்கப் போகின்றது என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்நிலையில், மத்திய செயலவையில் 11 உறுப்பினர்களை நியமனம் செய்ய அதிகாரம் பெற்றுள்ள புதிய தேசியத் தலைவர் லியோவ், இந்த நியமனங்களின் மூலம் தனது அரசியல் நிலையை வலுவாக்கிக்கொள்ளவும் முடியும்.

இருப்பினும், சுவா சொய் லெக் மற்றும் லியோவ்-வீ கா சியோங் கூட்டணிகள் இணைந்து செயலாற்றினால் மட்டுமே மசீசவில் மறுமலர்ச்சியையும், மறு சீரமைப்பையும், கொண்டுவர முடியும்.

இல்லையென்றால், மசீச கூடிய விரைவில் மற்றொரு உட்கட்சிப் பூசலில் சிக்கிக் கொண்டு, அணிப் போராட்டத்தில் இறங்கி, ஏற்கனவே இறங்கு முகமாக இருக்கும் அரசியல் மதிப்பீட்டில் மேலும் மதிப்புக் குறைவையும், அரசியல் அரங்கில் சரிவுகளையும் சந்திக்கும்.

-இரா.முத்தரசன்