புதுடில்லி, டிசம்பர் 23 – டில்லி மாநிலத்தில் பெரும்பான்மை பெற்ற பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஆட்சி அமைக்க முன்வராத காரணத்தால் மூன்றாவது பெரிய கட்சியாக வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் என்ற முறையில் அர்விந்த் கெஜ்ரிவால் டில்லி முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து தனக்கு பாதுகாப்பு வழங்க முன்வந்த டில்லி காவல் துறையிடம் தனக்கு பாதுகாப்பு வளையங்கள் எதுவும் வேண்டாம் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
கெஜ்ரிவால் டில்லி முதல்வராகப் பதவியேற்பது இந்திய அரசியல் அரங்கில் அண்மையில் நிகழ்ந்துள்ள மாபெரும் மாற்றம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், ஊழலற்ற அரசாங்கம் என்ற கோட்பாட்டோடு தேர்தல் களத்தில் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி தற்போது தாங்கள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது.
ஆனால் டில்லி மாநில நிர்வாகத்தை சிறப்பான முறையில் நடத்திக் காட்டினால் அதன் மூலம் நாட்டின் மற்ற பகுதிகளிலும் தனது அரசியல் ஆதிக்கத்தைக் காட்டக்கூடிய வாய்ப்பும், ஆதரவு பலத்தைப் பெருக்கிக் கொள்ளும் சாதகமும் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைக்கும்.
இதற்கிடையில், கெஜ்ரிவால் கட்சி டில்லியில் ஆட்சி அமைக்கவிருப்பதை முன்னிட்டு கருத்துரைத்த ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அண்ணா ஹசாரே, “கெஜ்ரிவால் எது சரியோ, எது நல்லதோ அதனைச் செய்வார்” என்று கூறியுள்ளார்.
அண்ணா ஹசாரே குழுவில் பிரதான தலைவராக இருந்த கெஜ்ரிவால் தனியாக அரசியல் கட்சி அமைக்க முடிவெடுத்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தனது குழுவில் உள்ளவர்கள் தனியாக அரசியல் கட்சி அமைப்பதை அண்ணா ஹசாரே எதிர்த்தார்.