கோலாலம்பூர், டிச 24 – இசைஞானி இளையராஜாவின் ‘கிங் ஆப் கிங்க்ஸ்’ என்ற இசை நிகழ்ச்சி வருகிற டிசம்பர் 28 ஆம் தேதி, மெர்டேக்கா அரங்கில் திட்டமிட்டபடி நடக்கும் என்று அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் குழுத் தலைவர் சாகுல் ஹமீது தாவூத் நேற்று அறிவித்தார்.
நேற்று காலை சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா, தனது புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது.இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இத்தகவல் கிடைத்தவுடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில், கோலாலம்பூரில் நேற்று மாலை உடனடியாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன் படி, “இளையராஜாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வந்திருப்பது லேசான மாரடைப்பு என்றும், தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு நல்ல நிலையில் இருப்பதாகவும் உறுதியளித்துள்ளனர். வரும் டிசம்பர் 27 ஆம் தேதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இளையராஜா மலேசியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று ஏற்பாட்டாளர்கள் சார்பில் உறுதி கூறப்பட்டது.
இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, இளையராஜாவின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜாவுடன் தொலைபேசி வழியாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
அதில் யுவன் கூறுகையில், “மலேசிய ரசிகர்கள் முன் இசை நிகழ்ச்சி நடத்த இளையராஜா ஆர்வமுடன் உள்ளார். எனவே அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலையடைய வேண்டாம்” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் 20,000 ரசிகர்கள் கலந்துகொள்வார்கள் என்றும், 85 சதவிகிதத்திற்கு மேற்ப்பட்ட நுழைவுச் சீட்டுகள் இவ்வார இறுதிக்குள் விற்றுவிடும் என்றும் சாகுல் ஹமீது குறிப்பிட்டார்.