தோக்கியோ, டிசம்பர் 27- ஜப்பான் தலைநகரான தோக்கியோவில் இருக்கும் யசுகுனி போர் நினைவிடத்திற்கு, ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே நேற்று விஜயம் செய்தார்.
அந்நாட்டின் ராணுவ ஆக்கிரமிப்பு வரலாற்றினை பெருமைப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவிடத்திற்கு பிரதமர் சென்றதை சீனா கடுமையாக எதிர்த்துள்ளது.
இதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளரான குவின் கங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஜப்பானின் ராணுவ ஆக்கிரமிப்பு, காலனித்துவ ஆட்சி போன்ற வரலாறுகளை அழகுபடுத்தும் விதத்திலேயே ஜப்பானியத் தலைவர்கள் யசுகுனி நினைவிடத்திற்கு செல்லுகின்றனர். பிரதமரின் இந்த விஜயம் சீன மற்றும் ஆசிய மக்களின் உணர்வுகளை மிருகத்தனமாக மிதிப்பதுபோல் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி 1930களில் ஜப்பான் தங்கள் நாட்டின் மீது கொடூரமான படையெடுப்பை நடத்தியதன் உணர்வுகளை மக்களிடையே தட்டி எழுப்புவதன் மூலம் தங்கள் எதிர்ப்பிற்கான பொது ஆதரவை பெற நினைக்கின்றது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் கிழக்கு ஆசியாவிலுள்ள பல நாடுகளை ஜப்பான் ஆக்கிரமித்தது.
அப்போது பொதுமக்களிடமும், போர் கைதிகளிடமும் ஜப்பான் ராணுவம் நடந்துகொண்டவிதம் மிகவும் மோசமாக சித்தரிக்கப்பட்டது. நான்ஜிங் படுகொலை போன்ற சம்பவங்கள் ஜப்பானின் அட்டூழியங்களுக்கு சாட்சியமாயின.
ஜப்பான் நடத்திய போர்களில் இறந்த வீரர்களுக்கு நினைவிடமாக 1970ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட யசுகுனி நினைவிடம் 2.5 மில்லியன் போர்வீரர்களுக்கு மட்டுமின்றி போர்க்குற்றங்களுக்காக மரணதண்டனை அளிக்கப்பட்ட பல உயர்மட்ட அதிகாரிகளுக்கும் நினைவிடமாக உள்ளது.
இந்தப் போர்களின் விளைவாக சீனா 20.6 மில்லியன் மக்களை இழந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதும், ஜப்பான் தனது விரிவாக்கத்தின் தொடர்பாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படும் சீனத் தீவுகள் பிரச்சினையும் இதனை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததே ஆகும் என்ற கருத்து நிலவுகின்றது.