பாக்தாத், டிசம்பர் 27- ஈராக்கில் நடந்த 2 குண்டு வெடிப்புகளில் 37 பேர் உடல் சிதறி பலியானார்கள். ஈராக்கில் சுமார் 6 லட்சம் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். அங்கு அல்கய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள், கிறிஸ்தவர்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்துகின்றன.
கிறிஸ்துமஸ் தினத்தன்று தலைநகர் பாக்தாத்தின் தோரா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அங்கு ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், தேவாலயம் அருகே பயங்கர கார் வெடிகுண்டு வெடித்து சிதறியது.
இதில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். மேலும், 38 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில், கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான அதோரியனில் உள்ள சந்தை ஒன்றில் பயங்கர குண்டு வெடித்தது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். கிறிஸ்துமஸ் நாளில் நடத்தப்பட்ட இந்த இரு தாக்குதல்களுக்கும் எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் அல்கய்தா கைவரிசையாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.