கோலாலம்பூர், டிசம்பர் 27- உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். நாம் ருசிக்காக உண்ணும் உணவுகளில் போதிய அளவு ஊட்டச்சத்துகள் இல்லாததால் ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடாபான பிரச்சனைகளும் தலை தூக்குகின்றன. அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது.
கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது நமது கடமையாகும். குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்ற வேண்டும். தலைமுடிக்கு ஏற்ற ஷாம்பூக்கு பயன்படுத்த வேண்டும். அதிக அளவு ஷாம்பூ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதிகம் நுரைவந்தால் தான் முடி சுத்தமாகும் என்று நினைக்க வேண்டாம். தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் (conditioner) உபயோகிப்பது அவசியமான ஒன்று.
கண்டிஷனரை முடியின் வேர்ப்பகுதியை விட நுனிப்பாகத்தில் தடவுவது நல்லது. கண்டிஷனர் தடவிய பிறகு முடியை நன்றாக அலச வேண்டும்.
மேலும், முடியை பாதுகாக்க ஈரமான கூந்தலை வேகமாக துவட்டுவதை தவிருங்கள். இதற்கு பதிலாக உங்கள் கூந்தலை 5 நிமிடம் துண்டில் சுற்றி வையுங்கள். முடியை காய வைக்கும் இயந்திரத்தில் (ஹேர்டிரையரை) முடியின் நுனி பாகத்தை விட வேர் பாகத்தில் நன்றாக காட்டுங்கள். நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடைய கூடும். ஹேர்டிரையரை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டக் கூடாது. உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்.