புது டெல்லி, டிசம்பர் 31- அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே மீதான வழக்கை தொடர்ந்து நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. எக்காரணம் கொண்டும் மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லையென்றும், அவர் மீதான வழக்கை திரும்பப்பெறும் எண்ணமில்லை என்றும் அமெரிக்கா கூறிவருவதாக தெரிகிறது.
அவருக்கு எதிராக மேலும் சில ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுக்களை பதிவு செய்வதற்கு கடைசி நாளான ஜனவரி 13-ந் தேதிக்குள் இந்த ஆதாரங்களை திரட்டவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
முன்னதாக டிசம்பர் 12-ந்தேதி தேவயானி கைது செய்யப்பட்டு அவரது ஆடைகளை களைந்து அமெரிக்க அதிகாரிகள் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. அவரது கைதுக்கு இந்தியா முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் இந்தியாவும் இங்குள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக சில நடவடிக்கை எடுத்துள்ளது என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.