மொகடிஷு, ஜன 2- சோமாலியா நாட்டின் தலைநகரான மொகடிஷுவில் ஜசிரா என்ற பிரபல தங்கும் விடுதி உள்ளது. பெரும்பாலான அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் இந்த தங்கும் விடுதியில் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்த தங்கும் விடுதியின் வாசலில் அடுத்தடுத்து 2 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் இன்று அதிகாலை வெடித்து சிதறின. கார்கள் வெடித்த அதிர்ச்சியில் தங்கும் விடுதிக்கு வந்தவர்களும் அவ்வழியாக சென்றவர்களும் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர்.
இதையடுத்து, அப்பகுதியில் காவல்துறையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் சிறிது நேரம் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. காவல்துறையினரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத தீவிரவாதிகள் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதன் பின்னர், தங்கும் விடுதியின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை காவல்துறையினர் பரிசோதித்த போது மேலும் ஒரு கார் வெடித்து சிதறியது.
இதில் சில காவல்துறையினர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். அங்கு விழுந்து கிடந்தவர்களை மருத்துவமனைக்கு ஏற்றி சென்ற அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) ஓட்டுநர் ஒருவர் இந்த தாக்குதலில் காவல்துறையினர் உட்பட 11 பேர் பலியானதாகவும், 17 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும், தாக்குதல் நடந்த பாணியை பார்க்கும் போது, இது தடைசெய்யப்பட்ட ஷபாப் தீவிரவாத இயக்கத்தின் கைவரிசையாக இருக்கலாம் என மொகடிஷு காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.