லக்னோ, ஜன 7- வரவிருக்கும் மக்களவை தேர்தலில் 20 மாநிலங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது ஆம்ஆத்மி கட்சி. அமேதியில் ராகுலுக்கு எதிராக தனது கட்சியின் குமார் விஸ்வாஸை நிறுத்த முடிவு செய்துள்ளது.இதுகுறித்து செய்தியாளர்களிடம் அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் கூறியதாவது, “ ஆம்ஆத்மியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. 20 மாநிலங்களில் போட்டியிட உள்ளோம். இதற்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விருப்பமுள்ளவர்கள் தங்கள் விபரங்களை எங்களுக்கு ஜனவரி 15 க்குள் அனுப்பவேண்டும். அந்த தொகுதியில் குறைந்தது 100 பேராவது வேட்பாளரை சிபாரிசு செய்யவேண்டும். மேலும், உத்திர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்து குமார் விஸ்வாஸ் போட்டியிடுவார். நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதிகளை கிராம சபைகளுக்கு பிரித்து தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் எங்கு, எப்படி செலவிடப்படுகிறது என்பது தெரியும்” என்று கூறினார்.