Home நாடு பத்துமலை பகுதியில் காணாமல் போன சிறுவிமானம்! மூவர் உயிருக்கு ஆபத்தில்லை!

பத்துமலை பகுதியில் காணாமல் போன சிறுவிமானம்! மூவர் உயிருக்கு ஆபத்தில்லை!

510
0
SHARE
Ad

Cessna-Aircraft-300-x-200கோலாலம்பூர், ஜன 11 – நேற்று பத்துமலை பகுதியில் உலுயாம் பத்து அணைக்கட்டு அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான செஸ்னா 172 ரக சிறுவிமானம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த மூவரும் உயிரோடு காப்பாற்றப்பட்டனர். ஆனால், அவர்கள் காயமுற்றிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இதனைத் தெரிவித்த கோம்பாக் வட்டார காவல் துறை தலைவர் ஏசிபி அப்துல் ரஹிம் அப்துல்லா, இன்று காலை 5 மணியளவில் அந்த பகுதியில் உள்ள பூர்வ குடி  மக்களின் உதவியோடு அந்த மூவரும் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினார்.

விமானத்தில் இருந்த மூவரில் இருவர் கடுமையாக காயமுற்றிருப்பதாகவும், ஒருவர் சிறுகாயங்களைக் கொண்டிருப்பதாகவும் அந்த மூவரும் செலாயாங் மருத்துவமனைக்கு காலை 7.45 மணியளவில் கொண்டு செல்லப்பட்டதாகவும் அப்துல் ரஹிம் கூறினார்.

இன்னும் முழுவிவரங்கள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

ரோயல் சிலாங்கூர் விமானம் ஓட்டும் சங்கத்தைச் சேர்ந்த அந்த விமானம், பத்துமலைப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது மாலை 5.15 மணியளவில் விமான போக்குவரத்து இலாகாவின் கட்டுப்பாட்டு கோபுரத்தின் தொடர்பிலிருந்து காணாமல் போனது.

விபத்துக்குள்ளான பின் விமானத்தைச் செலுத்திய கேப்டன் சைபுல் என்ற பெயர் கொண்ட விமானி அரச மலேசிய விமானப் படையிடம் வானொலி மூலம் தொடர்பு கொண்டு தனது இருப்பிடத்தை – பத்து அணைக்கட்டுக்கு எதிரிலுள்ள மலைப்பகுதியில் தான் இருப்பதை தெரிவித்திருக்கின்றார்.

அதன் பின்னர் அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

(படத்தில் காணப்படுவது விபத்துக்குள்ளான விமானத்தின் மாதிரியாகும்)

–    பெர்னாமா