கோலாலம்பூர், ஜன 22 – ஜப்பான் நாட்டில் நுழைய எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு, கடந்த 1999 ஆம் ஆண்டு, ஊழல் குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்டு அவர் சிறை வைக்கப்பட்டிருந்தது தான் காரணம் என்று ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜப்பான் தூதரகப் பேச்சாளர் தொமோகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில்,“எந்த ஒரு நாடாக இருந்தாலும், ஜப்பான் உட்பட ஊழல் குற்றச்சாட்டில் ஒரு வருடத்திற்கு மேல் சிறை வைக்கப்பட்டிருந்த நபருக்கு தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுப்பதற்கு அதிகாரம் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கடந்த 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டில் அன்வார் ஜப்பானுக்குள் நுழைந்திருக்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அப்போது அவர் அதற்கான சிறப்பு அனுமதி பெற்றிருந்தார் என்று தொமோகோ கூறினார்.
தற்போது அந்த சிறப்பு அனுமதி வேண்டும் என அன்வார் கேட்டுக்கொள்ளவில்லை என்பதால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்றும் தொமோகோ தெரிவித்தார்.