Home வணிகம்/தொழில் நுட்பம் டாவோஸ் உலகப் பொருளாதார மாநாடு – சில சுவாரசிய தகவல்கள்!

டாவோஸ் உலகப் பொருளாதார மாநாடு – சில சுவாரசிய தகவல்கள்!

611
0
SHARE
Ad

Davos-300-x-200டாவோஸ், ஜனவரி 25 – ஆண்டு தோறும் ஜனவரி மாத வாக்கில் உலகெங்கிலும் உள்ள மாபெரும் வணிகப் பிரமுகர்கர்கள், கோடீஸ்வர பிரபலங்கள், முன்னணி தொழில் நுட்ப வல்லுநர்கள், உச்சநிலை அரசு அதிகாரிகள்,  அரசியல் தலைவர்கள் என அனைவரையும்  ஒரு சேர ஈர்க்கும் மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாடு.

#TamilSchoolmychoice

ஐரோப்பா கண்டத்தின் மிக உயர்ந்த மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள நகரம் டாவோஸ். 11,000 பேர் கொண்ட மக்கள் தொகை. கடல் மட்டத்திலிருந்து 1,560 மீட்டர் உயரத்தில் அமைந்த நகரம். ஜனவரி மாத வாக்கில் -5 டிகிரிக்கும் குறைவான அளவிலான சீதோஷ்ணத்தைக் கொண்டிருக்கும் குளிர்ப் பிரதேசம்.

ஆண்டு தோறும் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டினால், 45 மில்லியன் ஸ்விஸ் ஃபிராங்க் (50 மில்லியன் அமெரிக்க டாலர்) பொருளாதார ரீதியாக ஈட்ட, சுவிட்சர்லாந்து நாடோ, மொத்தம் 70 மில்லியன் ஸ்விஸ் ஃபிராங்க் (77 மில்லியன் அமெரிக்க டாலர்) பொருளாதார ரீதியாக ஈட்டுகின்றது.

கலந்து கொள்பவர்கள் யார்? யார்?

உலகின் மிக முக்கிய 250 பிரமுகர்கள் ஆண்டு தோறும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில், இந்த ஆண்டு 40க்கும் மேற்பட்டவர்கள் உலக நாடுகளின் அரசாங்கங்களின் முதல் நிலைத் தலைவர்களாவர்.

மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெறுவது இந்த மாநாடு. பாதுகாப்பு காரணங்களால் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படுவது இல்லை என்றாலும், மாநாடு நடைபெறும் காலகட்டத்தில் சுமார் 4,000 சுவிட்சர்லாந்து பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபட்டிருப்பார்கள்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஒருவருக்கு 20,000 அமெரிக்க வெள்ளி செலவாகும். உலகின் 100 நாடுகளில் இருந்து மொத்தம் சுமார் 2,500 பேராளர்கள் மாநாட்டில் இந்த ஆண்டு கலந்து கொள்கின்றார்கள்.

இந்த ஆண்டு கலந்து கொள்பவர்களில் மிகவும் இளையவர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலிருந்து வரும் 21 வயது உமார் அன்வார் ஜஹாங்கீர் ஆவார். பாஹ்ரியா மெடிக்ஸ் என்ற மாணவர்களால் நடத்தப்படும் சமூக நல இயக்கத்தின் தலைவராக அவர் செயல்படுகின்றார். எதிர்கால உலகை வடிவமைத்து முன்னெடுத்துச் செல்லும் எதிர்காலத் தலைவர்ளில் ஒருவர் என்ற அங்கீகாரத்தோடு அவர் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

90 வயதான இஸ்ரேலின் அதிபர் ஷிமன் பெரஸ்தான் மாநாட்டில் இந்த ஆண்டில் கலந்து கொள்பவர்களில் அதிக வயதானவர்.

1971ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மாநாடு

1971ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார மாநாடு டாவோசில் முதன் முதலாக நடத்தப்பட்டபோது 444 பேராளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால், இப்போது இந்த எண்ணிக்கை ஐந்து மடங்காக உயர்ந்துவிட்டது.

ஏனோ, கலந்து கொள்பவர்களின் 15 சதவீதத்தினர் மட்டுமே பெண்களாவர்.

இத்தனை ஆண்டுகளில் ஒரே ஒரு முறைதான் இந்த மாநாடு டாவோசுக்கு வெளியே நடத்தப்பட்டிருக்கின்றது.

நியூயார்க் நகரில் 2011 செப்டம்பரில் நடந்த அனைத்துலக வர்த்தக கட்டிட குண்டு வெடிப்புகளுக்குப் பின்னர் உலக ஒற்றுமையை நிலைநிறுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்த உலகப் பொருளாதார மாநாடு 2002ஆம் ஆண்டு மட்டும் நியூயார்க் நகரில் நடத்தப்பட்டது.

இந்த உலகப் பொருளாதார மாநாட்டுக்கு நான்கு கிளைகள் செயல்படுகின்றன. தலைமையகப் பீடமாக சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரம் திகழ, மற்ற கிளைகள் நியூயார்க், பெய்ஜிங், தோக்கியோ ஆகிய நகர்களில் அமைந்துள்ளது.

இந்த ஆண்டு மாநாட்டில் 250 உள் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த ஏற்பாடுகளில் சுமார் 500 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வுகளை உலகமெங்கிலும் இருந்து 500 பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்வார்கள். இவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பே தங்களின் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

உலகின் மிகப் பெரிய தொலைக்காட்சி மற்றும் தகவல் ஊடகமான அமெரிக்காவின் சிஎன்என் மட்டும் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் என சுமார் 40 பேர் கொண்ட குழுவை அனுப்புகின்றது.

இந்த மாநாட்டின் நிகழ்வுகளை உலகெங்கும் இருந்து சுமார் 2 மில்லியன் மக்கள் ட்விட்டர் நட்பு ஊடகத்தின் வழி பின் தொடர்கின்றார்கள்.

மேற்குறிப்பிட்ட தகவல்களை சிஎன்என் தொகுத்து வழங்கியுள்ளது.