சிலாங்கூர், ஜன 27 – சிலாங்கூர் சட்டமன்றத்தை சேர்ந்த பிகேஆர் பிரதிநிதி லீ சின் செ இன்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் தனது ராஜினாமா கடிதத்தை சமர்பித்தார்.
சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராகிமுக்கு பதிலாக அவ்விடத்தில் அன்வார் இப்ராஹிம் பதவி ஏற்பார் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், லீ யின் பதவி விலகல் அதற்கு வலு சேர்த்துள்ளது.
காரணம் அன்வார் போட்டியிட வசதியாக லீ பதவி விலகியுள்ளார் என்று தற்போது தகவல்கள் வருகின்றன.
மேலும், லீ சென்னின் பதவி விலகல் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதை, ஒப்புக்கொண்ட சிலாங்கூர் சட்டமன்ற தலைவர் ஹன்னா இயோ, லீ ராஜினாமா செய்ததற்கான காரணத்தை கூற மறுத்துவிட்டார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், லீயின் தொகுதி தற்போது காலியாக உள்ளது. இதர வதந்திகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அப்பதவிக்கு போட்டிடவிருக்கும் அடுத்த வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, பிகேஆர் தலைமை தான் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் ஹன்னா தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக அன்வார் நாளை செய்தியாளர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.