புதுடில்லி, பிப் 5 – டில்லியில் நேற்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப் பட்டது.குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை சச்சினுக்கு வழங்கி கௌரவித்தார்.
இது குறித்து சச்சின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், நமது தாய் தேசத்திற்காக எனது சேவை தொடரும். மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஏதாவது ஒரு நல்ல காரியங்களை செய்து கொண்டே இருப்பேன். இந்த உயரிய விருதான பாரத் ரத்னாவைப் பெறுவதில் மிகவும் பெருமையடைகின்றேன். இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “இதை என் அன்னைக்கும், இந்தியாவிலுள்ள அனைத்தும் அன்னையர்க்கும் சமர்ப்பிக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் எனக்கு அளித்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதைப் பெற்றுள்ள விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இந்திய இளைஞர்கள் விஞ்ஞானிகளாகவும் அறிவியல் துறையில் சாதனை படைக்கவும் அவர் ஊக்க சக்தியாக விளங்கி வருகிறார்” என்றும் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.