ரியோ டி ஜெனிரோ – கோலாகலமாகத் தொடங்கியுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பார்வையாளராகப் பங்கு கொள்ளவும், இந்திய விளையாட்டாளர் அணிக்கு உற்சாகமூட்டவும் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ரியோ டி ஜெனிரோ சென்றுள்ளார்.
அங்கு பிரேசில் அதிபர் ஒலிம்பிக் பங்கேற்பாளர்களுக்கு அளித்த விருந்திலும் சச்சின் பங்கேற்றார். அதே விருந்தில் இந்தியாவின் பணக்காரர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீத்தா அம்பானி ஆகியோரும் கலந்து கொண்டனர் (மேலே படம்).
ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற ஒலிம்பிக் மன்றக் கூட்டத்தில் ஓர் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நீத்தா அம்பானி, அந்தப் பதவியை வகிக்கும் முதல் இந்தியப் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
பான் கீ மூனுடன் சச்சின் தெண்டுல்கர்…
ஒலிம்பிக்ஸ் விருந்தில் ஐக்கிய நாடுகளின் சபையின் தலைவர் பான் கீ மூனும் கலந்து கொண்டார். பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த விருந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ரியோ நகரில் உள்ள புகழ்பெற்ற இயேசுநாதர் சிலையின் முன்னால் நின்று கொண்டு “நான் இப்போது எங்கே இருக்கிறேன் தெரிகிறதா?” என்றும் சச்சின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
(படங்கள்: நன்றி – சச்சின் தெண்டுல்கர் டுவிட்டர் பக்கம்)