கோலாலம்பூர், பிப் 7 – சிலாங்கூர் மந்திரி பெசார் அப்துல் காலிட் இப்ராகிம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியுள்ளார்.
அண்மையில், பி.கே.என்.எஸ் எனப்படும் சிலாங்கூர் மேம்பாட்டுக் கழக இயக்குநர் வாரியத்தில் இருந்து 20 ஒப்பந்த தொழிலாளர்கள் நீக்கப்பட்டது ‘முற்றிலும் மனிதாபிமானமற்ற’ செயல் என்று அஸ்மின் அலி விமர்சித்தார்.
இது குறித்து அஸ்மின் மேலும் கூறுகையில், “உடனடியாக பதவி நீக்க கடிதங்களை திரும்பப் பெற்று, தங்களது கடும் நடவடிக்கைக்கு சிலாங்கூர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தனது அரசியல் பகைகளுக்காக அதிகாரத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்வதை காலிட் இப்ராகிம் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அதிக ஊதியத்துடன் வேலைக்கு அமர்த்தப்பட்ட பி.கே.என்.எஸ் ஒப்பந்த தொழிலாளர்கள் சிலரை, ஆட்குறைப்பு நடவடிக்கையின் கீழ் தான் பணி நீக்கம் செய்வதாக காலிட் நேற்று அறிவித்தார்.
மேலும், அவர்களில் பலர் பி.கே.என்.எஸ் -ன் பரிந்துரையின் பேரில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில பிகேஆர் தலைவரான அஸ்மின் அலி, கடந்த மாதம் பி.கே.என்.எஸ் இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.