Home நாடு இன்று அமரர் ஆதி.குமணன் பிறந்த நாள் நிகழ்வு

இன்று அமரர் ஆதி.குமணன் பிறந்த நாள் நிகழ்வு

1833
0
SHARE
Ad

Athi Kumanan 440 x 215கோலாலம்பூர், பிப்ரவரி 9 – மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கை உலகில் தனது துணிச்சலான எழுத்துக்களாலும், கருத்துக்களாலும், மக்கள் மனங்களில் தனியிடத்தைப் பிடித்து,‘இளைய தமிழவேள் என்ற பாராட்டு மொழியைப் பெற்ற அமரர் ஆதி.குமணன் (படம்) அவர்களின் 64ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வு இன்று (9 பிப்ரவரி 2014) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் தலைநகர் துன் சம்பந்தன் மாளிகை, டான்ஸ்ரீ சோமா அரங்கில் நடைபெறுகின்றது.

#TamilSchoolmychoice

ஆதி.குமணனின் மூத்த சகோதரரும்,‘நயனம் வார இதழின் ஆசிரியரும், மக்கள் ஓசை பத்திரிக்கையின் இயக்குநருமான ஆதி.இராஜகுமாரனின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வு ஆதி.குமணனின் நினைவுகளை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாக நடைபெறும்.

ஆதி.குமணனின், நெடுங்கால நண்பரும், ஈப்போவைச் சேர்ந்த வழக்கறிஞருமான ம.மதியழகன் இந்த நிகழ்வுக்குத் தலைமையேற்பார்.

குளுவாங்கைச் சேர்ந்த வழக்கறிஞர் சீலதாஸ் இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றுவார்.

1970ஆம் ஆண்டுகளில் வெளிவந்த தமிழ் மலர் என்ற பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக தனது பத்திரிக்கைத் துறை வாழ்க்கையைத் தொடங்கியவர் குமணபூபதி என்ற இயற்பெயரைக் கொண்ட ஆதி.குமணன். தமிழ் நாட்டின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி.

பின்னர், வானம்பாடி என்ற வார இதழைத் தோற்றுவித்து, அதன் ஆசிரியராகப் பணியாற்றி, மலேசியாவின் முன்னணி வார இதழாக அதனை உயர்த்திக் காட்டினார்.

மலேசிய நண்பன் தினசரிப் பத்திரிக்கை தொடங்கப்பட்டபோது அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்று, தனது துணிச்சலான அதே சமயத்தில் நடுநிலையான அரசியல் கருத்துக்களால், நாட்டில் அதிக அளவில் விற்பனையாகும் நாளிதழாக அதனை உருவாக்கினார்.

கடந்த 2005ஆம் ஆண்டில் அவர் காலமானார். அவரது நினைவாக அவரது பிறந்த நாள் நிகழ்வு ஆண்டுதோறும் அவரை நினைவில் கொண்டிருக்கும் குடும்பத்தினர், நண்பர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.