பிப்ரவரி 19 – முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் என்ற குற்றச்சாட்டோடு சிறையில் இருந்தவர்களை ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசாங்கம் விடுதலை செய்துள்ளது குறித்து ராஜீவ் காந்தியின் மகனும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் முடிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ள ராகுல் “ஒரு முன்னாள் பிரதமரைக் கொன்றவர்கள் விடுதலை செய்யப்படுகின்றார்கள் என்றால் நாட்டில் ஒரு சாமான்ய மனிதனுக்கு எப்படி நீதி கிடைக்கும்?” என்று கூறியுள்ளார்.
அவரது நாடாளுமன்ற தொகுதியான அமேதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் இவ்வாறு கூறினார்.
இருப்பினும் மரண தண்டனையை தான் ஆதரிப்பவன் இல்லை என்றும் ராகுல் கூறியுள்ளார்.
மத்திய அரசு எதிர்ப்பு
இதற்கிடையில் தமிழக அரசின் முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் கடிதம் எங்களுக்கு கிடைக்கவில்லை எனவும், தகவல் ஊடகங்கள் மூலமாகவே தாங்கள் தெரிந்து கொண்டதாகவும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், இந்த வழக்கு பயங்கரவாதிகள் தொடர்புடையது என்பதால், இது குறித்து முடிவு செய்யும் உரிமை மாநில அரசிற்கு கிடையாது எனவும், மத்திய அரசிற்கே உள்ளது எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் கபில்சிபில் எதிர்ப்பு
தமிழக அரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள மற்றொரு மத்திய அமைச்சர் கபில்சிபல் ‘தமிழக அரசின் கடிதம் கிடைத்தவுடன் அது குறித்து முடிவெடுக்கப்படும். நாட்டில் யார் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள், எதிராக இருக்கிறார்கள் என்பது தெளிவாகி உள்ளது. நான் எந்த ஒரு அரசையோ, கட்சியையோ கூறவில்லை’ என்று கூறியுள்ளார்.
தமிழக அரசின் முடிவு பொறுப்பற்றத் தன்மை கொண்டது என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. தமிழக அரசின் முடிவு குறித்து காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிதம்பரமும் எதிர்ப்பு
தமிழக அரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், வேறுவிதமான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
“மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து எங்களுக்கு மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. வருத்தமும் அளிக்கவில்லை. 23 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களை விடுதலை செய்வது நியாயமாக இருந்தால் உச்ச நீதிமன்றம் அதனைத் தெரிவித்திருக்கலாம். 23 ஆண்டு சிறை தண்டனை போதுமானது என கூறியிருந்தால் பரவாயில்லை” என்று வழக்கறிஞருமான சிதம்பரம் கூறியிருக்கின்றார்.