சென்னை, பிப் 26 – தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை திரும்ப பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்தார்.
அங்கு, நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதன் தமிழ் பிரதியை அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். தேர்தல் அறிக்கையில் 43 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அதில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள்.
இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை. சட்டவிரோதமாக அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தப்படும்.
மேலும், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால், கச்சத்தீவை மீட்டெடுப்பது தான் ஒரே தீர்வு. தமிழக மீனவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை திரும்ப பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.