புதுடில்லி, பிப் 26 – ஊழலுக்கு எதிராக உயிர் உள்ள வரை போராடுவேன் என அறிவித்துள்ள, ‘ஆம் ஆத்மி’ கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், ‘லஞ்சம், ஊழலை விட, மதவாதம் தான் மிகவும் மோசமானது’ என, இடத்திற்கு ஏற்றாற்போல் பேசி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
‘நாட்டிலிருந்து, லஞ்சம், ஊழலை ஒழிப்பது தான், என் முதல் கடமை’ என, கூறி, ஆம் ஆத்மி கட்சியை துவக்கிய கெஜ்ரிவால், நேற்று முன்தினம், டில்லியில், முஸ்லிம் அமைப்பினரின் கூட்டம் ஒன்றில் பங்கேற்றார்.
அங்கு, அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததுடன், லஞ்சம், ஊழலை விட, மிகவும் கொடுமையானது மதவாதம் தான்’ என, பேசினார். இதைக் கேட்ட, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நேற்று வரை, லஞ்சம், ஊழல் தான், நாட்டை அரிக்கும் கிருமி என கூறியவர், இன்று, அப்படியே மாற்றிப் பேசுகிறாரே. அரசியலில் குதித்து, ஓராண்டு ஆவதற்குள், தேர்ந்த அரசியல்வாதி போல், மாற்றிப் பேச, கெஜ்ரிவால் பழகி விட்டாரே!’ என, ஆச்சர்யம் தெரிவித்தனர்.