கோலாலம்பூர், பிப் 27 – சமூக நட்பு ஊடகங்களை விரிவாக பயன்படுத்தும் மலேசியாகினி செய்தி இணையத்தளத்தின் செயல்பாடு வரவேற்கப்பட்டு, நேற்று இரவு அதற்கு உலக வலைப்பதிவர்கள் மற்றும் சமூக நட்பு ஊடகங்கள் 2014 க்கான விருது வழங்கப்பட்டது.
பொதுமக்களின் 80 சதவிகித வாக்குகள் மற்றும் நீதிபதிகளின் முடிவின் படி, மலேசியாகினி இணையத்தளத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இது குறித்து மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் கூறுகையில், “எங்களுக்கு பேஸ்புக்கில் 1 மில்லியன் ரசிகர்கள் உள்ளார்கள். ஆனால் எதிர்காலத்தில் அதை விட இன்னும் சிறப்பாக செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.
இந்த விருதை அவருக்கு உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி வழங்கினார்.
ஒரு தலை பட்சமாக செயல்படுகிறார்கள் என்று கூறி முன்பு ஒருமுறை மலேசியாகினியை கடுமையாக விமர்சித்தவர் சாஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சாஹிட் கையால் இவ்விருதைப் பெற வந்த ஸ்டீவன் கான், “நீங்கள் என்னை சுட்டிக் காட்ட மாட்டீர்களே? செய்வீர்களா?” என்று நகைச்சுவையாகக் கேட்டார்.
அதற்கு சாஹிட், “தற்போதைக்கு சமாதானம்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.