Home நாடு “ம.இ.கா தேசிய முன்னணியிலிருந்து வெளியேற வேண்டும்” – வேதமூர்த்தி வேண்டுகோள்

“ம.இ.கா தேசிய முன்னணியிலிருந்து வெளியேற வேண்டும்” – வேதமூர்த்தி வேண்டுகோள்

895
0
SHARE
Ad

waytha-450-x-225கோலாலம்பூர், பிப் 27 – தனது பதவி விலகலைத் தொடர்ந்து எழுந்துள்ள சர்ச்சையைத் திசை திருப்பும் விதமாக, “ம.இ.கா தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்” என்ற அறைகூவலை ஹிண்ட்ராப் சார்பாக அதன் தலைவர் பி.வேதமூர்த்தி விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

“ம.இ.காவின் முன்னோடித் தலைவர்களான ஜோன் திவி, பூத் சிங், தேவாசர், ராமநாதன் போன்றோர் ம.இ.கா இன்று இப்படி ஒரு முடிவை எடுத்தால்  நிச்சயம் பெருமைப்படுவார்கள்” என்றும் வேதமூர்த்தி கூறியுள்ளார்.

 “அன்றைக்கு இந்திய சமுதாயத்தில் முக்கால்வாசிப் பேர் மிகவும் கீழ் நிலையில் தோட்டத் தொழிலாளர்களாக இருந்த கால கட்டத்தில் அவர்களின் உரிமைகளுக்காக போராடுவதற்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்தான் ம.இ.கா. எனது பதவி விலகலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளில் இந்தியர்களுக்காக 500 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டுள்ளதாக தேசிய முன்னணி ஒரு பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது. அப்படியே இது போன்ற மேம்பாட்டுத் திட்டம் உண்மையென்றாலும், 56 ஆண்டுகாலமாக புறக்கணிக்கப்பட்ட ஒரு சமுதாயத்திற்கு இது மிகவும் குறைவாகும். அப்படியே இந்தப் பணம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், இந்திய சமுதாயத்தை சென்று அடையவில்லை என்பதுதான் உண்மை” என அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் கூறியிருக்கின்றார்.

அரசாங்கத்திற்கு ஹிண்ட்ராப் சவால்

“அந்த 500 மில்லியன் எப்படி செலவழிக்கப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டுமென ஹிண்ட்ராப் அரசாங்கத்திற்கு சவால் விடுகின்றது. கைரி மற்றும் ஹிஷாமுடின் போன்ற அமைச்சர்கள் இந்தப் பணம் அமைச்சுக்களின் மூலமாக விநியோகிக்கப்பட்டதாக கூறிவருகின்றார்கள். மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறைகளினால் சிறுபான்மை இனங்களுக்கு போதிய சாதகங்கள் இல்லை என்பதால் இந்தப் பணத்தை அமைச்சுக்கள் இந்திய சமுதாயத்திற்கு கொண்டு போய் சேர்ப்பதில் தோல்வி அடைந்துவிட்டன.” என்றும் வேதமூர்த்தி சுட்டிக் காட்டியுள்ளார்.

உதாரணமாக, கல்வி அமைச்சு பல்கலைக் கழகங்களில் போதிய இடங்களை ஒதுக்குவதிலும், உபகாரச் சம்பளங்களை வழங்குவதிலும், மெட்ரிகுலேஷன் இடங்களை நியாயமான முறையில் வழங்குவதிலும் தோல்வியடைந்துவிட்டது என்றும் வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

“சமூக நல அமைச்சோ, ஏதாவது சிறு குறைகளைக் கண்டுபிடித்து இந்தியர்களிடம் இருந்து வரும் சமூக நல விண்ணப்பங்களை நிராகரித்து விடுகின்றது. சுகாதார அமைச்சும், மலேசிய மருத்துவக் கழகமும் வேண்டுமென்றே கிரிமியா மருத்துவ பல்கலைக் கழக அங்கீகாரத்தை ரத்து செய்து அதன் மூலம் ஏழை இந்தியர்கள் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பயிலக்கூடிய வாய்ப்புக்களை கெடுத்துவிட்டன. இது தவிர ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கீகரிக்கப்படாத மருத்துவப் பட்டங்களைக் கொண்டிருக்கின்றார்கள்.”

“விவசாயம், வீடமைப்பு, ஆள்பல போன்ற அமைச்சுகள் மாற்று விவசாயத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதிலும், வேலைப் பயிற்சித் திட்டங்களை வழங்குவதிலும், மாற்று நிலம் மற்றும் வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதிலும், 1970ஆம் ஆண்டு முதல் தங்களின் உறைவிட வசதிகளை இழந்த எட்டு லட்சம் தோட்டத் தொழிலாளர்களுக்கு போதிய நஷ்ட ஈடுகளை வழங்குவதிலும் தோல்வியையே கண்டுள்ளன. இதனால், நகர்ப்புற வறுமை ஏற்பட்டிருப்பதோடு இந்தியர்களிடையே குற்றச் செயல்களும் பெருகிவிட்டன” என்றும் வேதமூர்த்தி சுட்டிக் காட்டியுள்ளார்.

ம.இ.கா தேசிய முன்னணியிலிருந்து விலக வேண்டும்

“இது போன்ற மனித உரிமை மீறல்கள் ஒரு புறம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதி என்று கூறிக் கொள்ளும் ம.இ.காவோ தனது கடமையில் தோல்வியடைந்து விட்டது. இன்னும் அரசாங்கத்தின் குரலாக ஒலித்துக் கொண்டு, சமுதாயத்தை ஏமாற்றி வருகின்றது. இந்திய சமுதாயத்தைப் பாதிக்கும் உண்மையான, கடுமையான விவகாரங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டது. நாம் அன்றாடம் கேட்பது என்னவென்றால், தமிழ்ப் பத்திரிக்கைகளில் அறிக்கைகளின் வழி அரசாங்கம் இந்தியர்களுக்கு அதைச் செய்தது, இதைச் செய்தது என்பதைத்தான், இது தவிர இந்திய சமுதாயத்தை நீண்ட காலமாக பீடித்திருக்கும் பிரச்சனைகளுக்கு, நிரந்தரமான, முழுமையான தீர்வு காண்பதற்கு உறுதியான எந்த நடவடிக்கையையும் ம.இ.கா இதுவரை மேற்கொள்ளவில்லை” என்றும் வேதமூர்த்தி தனது அறிக்கையில் ம.இ.காவைச் சாடியுள்ளார்.

இந்த நிலையில் ஏழை இந்தியர்களின் நிலைமை இன்னும் கீழ்நிலைக்குப் போகாமல் இருக்க, தேசிய முன்னணியின் கூட்டணியிலிருந்து ம.இ.கா. உடனடியாக விலக வேண்டுமென ஹிண்ட்ராப் வற்புறுத்துகின்றது. இனியும் தேசிய முன்னணி அரசாங்கம் இந்தியர்கள் எதிர்நோக்கும் தனித்துவமான பிரச்சனைகளை தீர்க்கும் என்ற போலி நம்பிக்கையைக் கொடுத்து இந்திய மக்களை இனியும் ம.இ.கா ஏமாற்றாமல் இருக்க வேண்டும். இப்போது இருப்பது போன்று அரசியல் அடிமைகளாக இனியும் இருக்காமல், கௌரவத்தோடு இந்த முடிவை எடுக்க வேண்டும்” என்றும் வேதமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.