கீவ், மார் 1 – உக்ரைன் நாட்டில், இரண்டு விமான நிலையங்களை, ரஷ்ய ஆதரவாளர்கள் கைப்பற்றியுள்ளனர். சோவியத் யூனியன் உடைந்த பின், உக்ரைன் தனி நாடானது. பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த உக்ரைனை, ஐரோப்பிய யூனியனில் இணைக்கும்படி கோரி, எதிர்க்கட்சியினர், இரண்டு மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தினர்.
இவர்களை ஒடுக்குவதற்காக, அரசு, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த சட்டத்தைப் பயன்படுத்தி, போராட்டக்காரர்கள் மீது, கடந்த வாரம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 25 பேர் கொல்லப்பட்டனர். போராட்டம் கட்டுக்குள் வராததால், அதிபர் யானுகோவிச் தலைமறைவானார்.
அதிபரை பதவி நீக்கம் செய்து விட்டதாக, உக்ரைன் பார்லி., அறிவித்தது. இடைக்கால அதிபராக, அலெக்சாண்டர் துருச்சினோவ் பொறுப்பேற்று உள்ளார். ஆனால், தான், இன்னும் பதவியில் உள்ளதாக, யானுகோவிச் தெரிவித்துள்ளார். இந்நிலையில், க்ரீமியா மாகாணத்தில், யானுகோவிச் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாகாணத்தின் சட்டசபையை, ரஷ்ய ஆதரவாளர்கள், நேற்று முன்தினம், கைப்பற்றி, அங்கு, ரஷ்ய கொடிகளை ஏற்றினர். இந்நிலையில், நேற்று இந்த மாகாணத்தில் உள்ள இரண்டு விமான நிலையங்களை, ரஷ்ய ஆதரவாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாக, இடைக்கால அதிபர், அலெக்சாண்டர், ஐ.நா.,வின் உதவியை கோரியுள்ளார். மேற்கண்ட சம்பவங்களில் நடவடிக்கை எடுக்காமல் இருந்த, ராணுவ தளபதி, யூரிஇலினை, தற்போதைய அரசு, பதவிநீக்கம் செய்துள்ளது. இதற்கிடையே, இரண்டு விமான நிலையங்களையும் மீட்டுள்ளதாக, உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.