சென்னை, மார் 1 – சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படத்தின் சிறப்பு செல்பேசிகளை சவுந்தர்யா ரஜினி இன்று சென்னையில் வெளியிட்டார். ரஜினி – தீபிகா படுகோன் நடித்துள்ள 3 டி மோஷன் கேப்சரிங் படம் கோச்சடையான் – தி லெஜன்ட். இந்தப் படத்துக்கு கே எஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். இந்தப் படத்தை சவுந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார்.
ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் மார்ச் 9-ஆம் தேதியன்று ரஜினிகாந்த், அமிதாப் முன்னிலையில் வெளியாகிறது. சத்யம் திரையரங்கில் பலத்த பாதுகாப்புடன் இந்த விழா நடக்கிறது. ஏப்ரல் 11-ம் தேதி கோச்சடையான் படம் உலகம் முழுவதும் 6000-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது.
ஒரு திருவிழாவைப் போல இந்தப் படத்தின் வெளியீட்டைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். கோச்சடையான் படம் இந்திய சினிமா வரலாற்றில் புதிய தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள படம் என்பதால், அதனை கொண்டாடும் வகையில் கார்பன் செல்பேசி நிறுவனம் 10 லட்சம் சிறப்பு செல்பேசிகளை வெளியிட்டுள்ளது.
இந்த செல்பேசிகளில் கோச்சடையான் புகைபடங்கள், பாடல்கள், பஞ்ச் வசனங்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்கும். இவற்றின் விலை ரூ 2000 முதல் ரூ 5000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோச்சடையான் பாடல்களையும் கார்பன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த சிறப்பு செல்பேசிகள் மற்றும் பாடல்கள் வெளியிடும் விழா இன்று சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது.
பெரிய அளவில் பிரமாண்டமாக நடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த வெளியீட்டு விழா சத்தமின்றி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படத்தின் இயக்குநர் சவுந்தர்யா ரஜினி முதல் செல்பேசியை வெளியிட்டார்.