டெல்லி, மார் 3 – ஊழலுக்கு எதிரான அவசர சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கோரிக்கையை மத்திய அமைச்சரவை நிராகரித்துள்ளது. ஊழல் தடுப்புச் சட்டம், பொதுமக்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவைகளை பெற வழிவகை செய்யும் சட்டம் ஆகியவற்றை அவசர சட்டங்களாக நிறைவேற்ற வேண்டும் என்பது ராகுல் கருத்து.
இந்த அவசர சட்டங்களை நிறைவேற்றுவதற்கு சோனியா தலைமையிலான காங்கிரஸ் உயர்நிலைக் குழுவும் ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் இப்படியான அவசர சட்டங்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் கபில் சிபல், உள்துறை அமைச்சர் ஷிண்டே ஆகியோர் அதிபர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
ஆனால் அவசர சட்டங்களுக்கு அனுமதியளிப்பது குறித்து அதிபர் எந்த ஒரு உறுதியான கருத்தும் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும் அவசர சட்டங்களுக்கு அதிபர் ஒப்புதல் தரக்கூடாது என்று சிபிஎம் கடிதமும் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டங்களை கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அவசர சட்டங்களை அதிபர் நிராகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் அவற்றை நிறைவேற்றும் முடிவை அமைச்சரவை கைவிட்டது. நேற்றைய கூட்டத்தில் சீமாந்திரா பகுதிக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சிறப்பு அந்தஸ்து அளிக்கும் முடிவை செயல்படுத்துமாறு திட்டக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் ஜாட் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது