வாஷிங்டன், மார்ச் 7 – ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா ஆதரவு தெரிவித்துள்ளார். சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து திபெத்தை விடுவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகிறார் புத்த மதத் தலைவர் தலாய் லாமா. தற்போது இவர் அமெரிக்காவில் சுற்று பயணம் செய்து வருகிறார். வாஷிங்டனுக்கு வந்த தலாய் லாமாவை எம்பிக்கள் வரவேற்றனர். அப்போது தலாய் லாமா அளித்த பேட்டியில் கூறியதாவது,
ஓரின சேர்க்கையாளர் திருமணம் குறித்து தேவையில்லாத அச்சங்கள் உள்ளன. காதல் மிகவும் அழகானது. ஒத்திசைவு உள்ள 2 பேர் இணைந்து உறவு கொள்வதில் எந்த பிரச்னையும் கிடையாது. மேலும் ஓரின சேர்க்கை விவகாரம் தனிப்பட்ட அந்தரங்கமான விஷயம். இருவரும் ஏற்றுக்கொண்டு, இருவரும் திருப்தியுடன், முழு சம்மதத்துடன் இருந்தால் அது சரிதான்.
மேலும், பாலியல் உறவுகளை தங்களது மதத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டே மக்கள் வைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இருதரப்பினரின் விருப்பங்களும் முழுமையான சம்மதத்துடன் நடந்தால் அது சரிதான். அதேநேரத்தில் அவர்களை கொடுமைப்படுத்துவது, தவறாக பயன்படுத்துவது போன்றவை மனித உரிமையை மீறிய குற்றங்களாகும் என தலாய் லாமா கூறினார்.