Home நாடு செல்லியல் பார்வை: MH 370 பலவீனங்களை அடிப்படையாகக் கொண்டு குடிநுழைவுத் துறையை அரசாங்கம் மறு சீரமைக்க...

செல்லியல் பார்வை: MH 370 பலவீனங்களை அடிப்படையாகக் கொண்டு குடிநுழைவுத் துறையை அரசாங்கம் மறு சீரமைக்க வேண்டும்!

691
0
SHARE
Ad

Immigresen KLIA 440 x 215மார்ச் 12 – காணாமல் போன மாஸ் MH 370 விமானத்தின் விவகாரத்தில் மலேசியாவின் பெயர், அது நற்பெயரோ –  அவலப் பெயரோ உலக அரங்கில் மிக மிக பிரபலமாகிவிட்டது. இன்றைக்கு உலகின் எந்த நாட்டின் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தாலும் மலேசியாவின் காணாமல் போன மாஸ் விமானத்தைத் தேடும் பணிகளைப் பற்றிய செய்திகள்தான் ஆக்கிரமித்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

அதே வேளையில், மலேசிய குடிநுழைவுத் துறையில் புரையோடிப் போயிருக்கும் பலவீனங்களை உலகுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டி மலேசியாவின் நற்பெயருக்கு தீராத அவமானத்தைத் தேடித்தந்து விட்டது MH 370 விவகாரம்.

திருடப்பட்ட கடப்பிதழ்கள் எப்படி அனுமதிக்கப்பட்டன?

Passports 300 x 200திருடப்பட்ட பயணக் கடப்பிதழ்களைக் கொண்டிருந்தவர்களை முறையாகப் பரிசோதிக்காமல் – அவை திருடப்பட்ட கடப்பிதழ்கள் என்ற தகவல்கள் அனைத்துலக காவல் துறையினரால் (இண்டர்போல்) தரப்பட்டிருந்தபோதும் – எவ்வாறு விமானத்திற்குள் மலேசியக் குடி நுழைவு அதிகாரிகள் அந்த இரண்டு பயணிகளை அனுமதித்தார்கள் என்பதை மையமாக வைத்தே அந்நிய நாட்டு தகவல் ஊடகங்கள் நம்மை கிழி கிழி என்று கிழித்துத் துவைத்துக் காயப்போட்டு விட்டார்கள்.

ஆனால், இதையெல்லாம் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்கும் மலேசியர்களுக்கு மலேசியக் குடி நுழைவுத் துறையில் தலைவிரித்தாடும் இலஞ்ச இலாவண்யங்கள்தான் நடந்த இந்த பலவீனத்திற்கான ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்பது நன்கு தெரியும்.

மலேசியாவில் இலஞ்ச ஊழல் என்பது நமது நடைமுறை வாழ்க்கையில் புரையோடிப் போன ஒன்று என்பது மலேசியர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். அரசாங்க இலாகாக்களிலேயே இலஞ்ச ஊழல் எல்லா நிலைகளிலும் தலைவிரித்தாடும் இலாகா குடிநுழைவுத் துறை இலாகாதான் என்பது யாரும் வெளியே பகிரங்கமாக சொல்ல முடியாத – ஆனால் அனைவருக்கும் தெரிந்த ஒரு ராஜ ரகசியமாகும்.

மலேசியா போலே’(Malaysia Boleh) என்ற தாரக மந்திரத்தோடு, குடிநுழைவுத் துறையைப் பொறுத்தவரை பல சமாச்சாரங்கள் தாராளமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அனைத்துலக கடப்பிதழ்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஒருசில உயர்மட்ட நிலையிலான அந்நிய நாட்டவர்களின் விண்ணப்பங்கள், வெளிநாட்டுத் தூதரக விண்ணப்பங்கள் மட்டுமே குடிநுழைவுத் துறையில் முறையாக கையாளப்படுபவை.

மற்ற எல்லா வகை விண்ணப்பங்களும் அனுமதிகளும், இடைத் தரகர்கள் மூலமாக – அவர்களுக்கு கொடுக்கப்படும் கூடுதல் பணத்தின் மூலமாகத்தான் நடைபெறுகின்றது என்பது சம்பந்ததப்பட்டவர்கள் அனைவருக்கும் தெரியும்.

இடைத் தரகருக்கு பணம் கொடுத்தால் விசா நீட்டிக்கப்படும்

உதாரணமாக, இந்தியாவிலிருந்து வந்த ஒருவரின் விசா அனுமதியை நீட்டிக்க நேரடியாக விண்ணப்பித்தால் அனுமதி கிடையாது என்று குடி நுழைவுத் துறையிடம் இருந்து பதில் வரும். ஆனால், அதே விண்ணப்பத்தை குடிநுழைவுத் துறை அலுவலகத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் இடைத் தரகர் ஒருவர் மூலமாக சமர்ப்பித்து, அவர் கேட்கும் தொகையைக் கொடுத்துவிட்டால், விசா அனுமதி உடனே கைமேல் எந்தவிதக் கேள்வியும் இல்லாமல் கிடைக்கும்.

அதே போன்றதுதான் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான அனுமதி விண்ணப்பங்களும்!

நேரடியாக விண்ணப்பம் செய்யும் போது நம்மை இழுத்தடித்து அலைய விடுவார்கள். ஆனால், குறிப்பிட்ட இடைத் தரகர் மூலமாக காரியம் நடந்தால் எல்லாம் சுமுகமாக நடந்து முடிந்து விடும்.

அதே போன்று, அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட கூடுதலாகத் தங்கிவிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களை இடைத் தரகர்கள் மூலம், ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு குடிநுழைவுத் துறை அதிகாரிகளின் துணையோடு பிரச்சனையின்றி அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் பணிகளும் ஒருபுறம் தாராளமாக எப்போதும் நடைபெற்று வருகின்றன.

இதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்களிடமே அபராதத்தொகை செலுத்தச் சொல்லி குடி நுழைவுத் துறையே அவர்களை அதிகாரபூர்வமாகத் திரும்ப அனுப்பி விடலாம். ஆனால் ஏனோ குடிநுழைவுத் துறை அதனைச் செய்வதில்லை.

பிரதமர் முதற்கொண்டு எத்தனையோ முக்கிய அம்னோ பிரமுகர்கள் உள்துறை அமைச்சர்களாக இருந்துவிட்டுப் போய்விட்டார்கள். ஆனால், இதுவரையில் அவர்களில் யாரும், கண்முன்னே நடக்கும் இந்த குடிநுழைவுத் துறை இலஞ்ச விவகாரத்தில் மட்டும் ஏனோ துணிந்து கைவைக்கவில்லை.

இது போன்ற கோளாறுகளை, கண்முன்னே நடக்கும் தவறுகளை அரசாங்கம் அனுமதித்த காரணத்தால், கண்டும் காணாமல் விட்டதால், இன்றைக்கு குடி நுழைவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ செய்த ஒரு தவறு நமது நாட்டின் ஒட்டு மொத்த பெயருக்கே அவலத்தையும் களங்கத்தையும் எந்த அளவுக்கு ஏற்படுத்தி விட்டது என்பதை காணாமல் போன விமானத்தின் விவகாரம் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றது.

அந்நிய தகவல் ஊடகங்களின் கவனம் முழுக்க நமது பலவீனங்களில்…

இன்றைக்கு நமது பெர்னாமா செய்தி நிறுவனமும், ஆஸ்ட்ரோ அலை வரிசைகளும் காணாமல் போன விமானத்தைத் தேடுவதில் நமது அரசாங்கம் எடுத்துவரும் சாதகமான முயற்சிகளைப் பற்றியே பேசிவருகின்றன. இரண்டு வெளிநாட்டவர்கள், புகார் செய்யப்பட்ட திருட்டு கடப்பிதழ்களுடன் எப்படி குடிநுழைவுத் துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு வெளியேறினார்கள் என்பது பற்றி பேசுவதில்லை.

ஆனால், வெளிநாட்டு தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தால், அந்நிய நாட்டு தகவல் ஊடகங்களைப் படித்தால், அவர்களின் கவனம் முழுக்க – சாதாரணமாக ஓரிரு நிமிடங்களில் பரிசோதித்துக் கண்டுபிடித்திருக்க முடிகின்ற ஒரு விஷயத்தில் ஏன் மலேசியக் குடி நுழைவுத் துறை அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை என்ற கண்ணோட்டத்திலேயே இருக்கின்றது.

இதனால் மலேசியாவில் பாதுகாப்பற்ற தன்மை இருக்கின்றது, திருட்டு கடப்பிதழ்களுக்கான மையமாக நமது நாடு திகழ்கின்றது, நமது விமான நிலையங்களில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்பது போன்ற பல அவப் பெயரை உண்டாக்கும் கேள்விகள் நம்மை நோக்கி எழுப்பப்பட்டு வருகின்றன.

குடி நுழைவுத் துறையை மறு சீரமைப்பு செய்ய இதுவே தக்க தருணம்

இந்த காணாமல் போன விமான விவகாரத்தை அடிப்படையாக வைத்து, ஒட்டு மொத்த குடிநுழைவுத் துறையையும் மறு சீரமைக்க அரசாங்கம் முன்வர வேண்டும். அதற்கான பொருத்தமான காலம் இப்போது விட்டால் மீண்டும் ஒரு முறை அமையுமா என்பது சந்தேகமே.

குடிநுழைவுத் துறைக்கு சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு விண்ணப்பமும் இத்தனை நாட்களுக்குள் முடிவு செய்யப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பதில் அதிகாரபூர்வமாக விண்ணப்பதாரருக்கு அறிவிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பம் முறையாக இல்லை என்றால் அதனை உடனடியாக அதிகாரபூர்வமாக நிராகரிக்கும் நடைமுறை வரவேண்டும். இடைத் தரகர்கள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். சிங்கப்பூர் அரசாங்கம் இத்தகைய நடைமுறைகளைத்தான் பின்பற்றுகின்றது. அதனால்தான் உலக அரங்கில் நன்னெறி விவகாரங்களில் முன்னணியில் நிற்கின்றது.

Ahmad Zahid Hamidiமேலும் குடிநுழைவுத் துறை அலுவலகங்களில் காவல் துறையின் ரகசியப் படையினரை நிறுத்துவதன் மூலமும், ஊழல் தடுப்பு நிறுவன அதிகாரிகளை மாறுவேடங்களில் அல்லது சாதாரண உடைகளில் உலவ விடுவதன் மூலமும் இலஞ்ச நடவடிக்கைகளை அரசாங்கமும் காவல் துறையும் இணைந்து நிறுத்த முடியும்.

இன்றைக்கு உள்துறை அமைச்சராக இருக்கும் அகமட் சாஹிட் ஹாமிடி (படம்) துணிந்து பல நடவடிக்கைகளையும், முடிவுகளையும் எடுத்து வருகின்றார். குடிநுழைவுத் துறையும், காவல் துறையும் உள்துறை அமைச்சின் கீழ்தான் வருகின்றது என்பதால் இந்த இரண்டு அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து குடிநுழைவுத் துறையை மறு சீரமைப்பு செய்தால் அகமட் சாஹிட் மலேசியர்களால் பெரிதும் மதிக்கப்படுவார், நன்றி கூறப்படுவார்.

செய்வாரா?

மாஸ் விமான நிறுவனத்திற்கும், விமானப் போக்குவரத்து இலாகாவிற்கும் மற்றொரு அவப் பெயர்

இந்தக் கட்டுரை எழுதி முடிக்கும் தருணத்தில், காணாமல் போன விமானத்தின் டிரான்ஸ்போன்டர் கருவி (விமானத்தின் இருப்பிடத்தைக் காட்டும் சாதனம்) செயலிழக்கச் செய்யப்பட்டு அதன்பின்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த விமானம் பறந்திருக்கின்றது என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வளவு நேரம் வரை விமானப் பயணங்களை கண்காணிக்கும் மலேசிய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என அந்நிய நாட்டு தகவல் ஊடகங்கள் தற்போது தொலைக்காட்சிகளில் குடைந்தெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

விதிமுறைகளுக்கு மாறாக, இரண்டு பெண்மணிகளை – காணாமல் போன மாஸ் விமானத்தின் விமானிகளுள் ஒருவர் இன்னொரு பயணத்தின் போது விமானிகள் அறைக்குள் மணிக்கணக்கில் அனுமதித்திருக்கின்றார் என்ற அதிர்ச்சி தரும் தகவலும் வெளியாகி மாஸ் நிறுவனத்தின் மானத்தை இன்னொரு கோணத்தில் வாங்கியிருக்கின்றது.

ஏற்கனவே, ஒரு தட்டு நாசி லெமாக் உணவால் மதிப்பையும் மரியாதையும் இழந்த மாஸ் நிறுவனத்திற்கு இப்போது நேர்ந்திருப்பது இன்னொரு அவமானம். தீர்க்க முடியாத களங்கம்!

மலேசிய அரசாங்கம்தான் எதிர்காலத்தில் இதற்கெல்லாம் முறையான, தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டும்.

-இரா.முத்தரசன்