Home நாடு “மோதிப் பார்க்கலாமா?- முதலை வேகத்தில் அறைவேன்” – கைரிக்கு போமோ சவால்

“மோதிப் பார்க்கலாமா?- முதலை வேகத்தில் அறைவேன்” – கைரிக்கு போமோ சவால்

1102
0
SHARE
Ad

f5d85a5c02506d32065f4ae913e79937கோலாலம்பூர், மார்ச் 14 – விமானம் கண்டுபிடிப்பதாக கூறி சடங்குகள் செய்ய போன ‘போமோ’ இப்ராகிம், இப்போது நாட்டின் அமைச்சருக்கு எதிராக அறிக்கை விடும் அளவிற்கு ஒரே நாளில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார்.

தனது வழியில் குறுக்கிட வேண்டாம் என்றும், தன்னை கருவியாக வைத்து சுய விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டாம் என்றும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீனுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

நேற்று சுவாரா தொலைகாட்சிக்கு பேட்டியளித்த போமோ இப்ராகிம், “இந்த இடைக்காலத்தில் அமைச்சராகியுள்ள அந்த சிறுவன், என்னை வைத்து விளம்பரம் தேடிக் கொள்ளக் கூடாது. எனது வேலையை செய்ய விட வேண்டும். நான் அப்படி என்ன செய்யக்கூடாததை (haram) செய்துவிட்டேன். முதலில் என்னை வந்து சந்தியுங்கள். நீதிமன்றத்திலானாலும் சரி, தீர்ப்பு சொல்வதற்கு முன் முழுமையாக விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் தான் நடத்திய சடங்கு பற்றி, “இந்த மந்திர கம்பள போமோவால் தர்மசங்கடம்” என பொதுவில் கைரி கூறியிருப்பதையும் போமோ சுட்டிக்காட்டினார்.

மேலும், “நான் கைரி ஜமாலுதீனிடம் வெளிப்படையாக ஒன்று சொல்கிறேன். சவால் விடுகிறேன். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நான் எனது மஹாகுரு பதவியை விட்டு விலகுகிறேன். மோதிப் பார்க்கலாம். நான் முதலை மாதிரி வேகமாக அவரை அறைவேன். அப்போது தெரியும்” என்று போமோ சவால் விடுத்துள்ளார்.

கைரியை அமைச்சராக நியமித்த பிரதமர் நஜிப் துன் ரசாக் தவறு செய்துவிட்டார் என்றும், தேவைப்பட்டால் தான் 500,000 சிலாட் உறுப்பினர்களோடு சேர்ந்து நஜிபிடம் மனு கொடுக்கப்போவதாகவும் போமோ எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்தில் உயர் பதவியில் உள்ள ஒரு தலைவர் தான் தன்னை அழைத்து விமானத்தை கண்டு பிடித்துத் தருமாறு கூறியதாக போமோ (shaman) இப்ராகிம் மாட் ஸின் (ராஜா போமோ செடுனியா நுஜும் விஐபி) என்ற அந்த நபர் கூறியிருந்தார்.

ஆனால், நேற்று இடைக்கால போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் வெளியிட்ட அறிக்கையில், அரசாங்கத்தில் யாரும் அவரை அழைக்கவில்லை என்று தெரிவித்தார்.

காணாமல் போன மாஸ் விமானத்தை தான் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி கேஎல்ஐஏ விமான நிலையத்தில் போமோ நடத்திய சடங்கினை, அங்கிருந்த ஊடகங்கள் அனைத்தும் பதிவு செய்தன.

உலக நாடுகள் அனைத்தும் இந்த சடங்கை விமர்சிக்கும் அளவிற்கு முகநூல், டுவிட்டர் என எங்கும் போமோ படங்களாக உலா வந்தது.

அதிலும் குறிப்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா தனது அலுவலகத்தில் இருந்தவாறு இந்த காட்சிகளை பார்ப்பது போல் வெளியான புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதில் உண்மையில்லை. அந்த படம் வேறு ஒரு புகைப்படத்தில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டது என்று பின்னர் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுவாரா தொலைக்காட்சிக்கு போமோ அளித்த நேர்காணல்:

http://www.youtube.com/watch?v=dnvMsdi5mc8