மும்பை, மார்ச் 17 – நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியடையும் என்று, பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி கூறினார். மராட்டிய மாநிலம் மும்பையில் பாரதீய ஜனதா கட்சியின் சிந்து பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப்பிரதமருமான எல்.கே.அத்வானி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, பாரதீய ஜனதா கட்சி ஏற்கனவே அதிகபட்சமாக 182 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வருகிற தேர்தலில் மேலும் கூடுதல் இடங்கள் கிடைக்கும். அதே சமயம் காங்கிரஸ் கட்சிக்கு வரலாறு காணாத தோல்வி கிடைக்கும். முன்பைவிட குறைந்த அளவு தொகுதிகளில் மட்டும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
இருபதாம் நூற்றாண்டில் இந்தியா, உலகத்திலேயே வலிமை மிக்க நாடாக திகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் வறுமை மற்றும் போதிய கல்வி அறிவு இன்மையால் அது நிறைவேறாமல் போய்விட்டது.
நாடு பிரிவினைக்குப்பின் இடம்பெயர்ந்து வந்த சிந்து இன மக்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். மக்கள் தொகையும் உயர்ந்துள்ளது. நீங்கள் சிவசேனாவுடன் சேர்ந்து, பாரதீய ஜனதா கூட்டணி வெற்றிக்காக அயராது பாடுபட வேண்டும் என அத்வானி பேசினார்.