Home உலகம் “நம்பிக்கை தரும் ஆதாரங்கள் தேடுதலில் கிடைத்துள்ளன” – ஆஸ்திரேலியா பிரதமர் அறிவிப்பு

“நம்பிக்கை தரும் ஆதாரங்கள் தேடுதலில் கிடைத்துள்ளன” – ஆஸ்திரேலியா பிரதமர் அறிவிப்பு

743
0
SHARE
Ad

Tony-Abbot-Featureமார்ச் 23 – முன்பை விட அதிகமான தீவிரத்தோடு தேடுதல் வேட்டைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், மேலும் நம்பகத் தன்மையுடைய தரும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், அதனால் காணாமல் போன விமானத்தைச் சூழ்ந்துள்ள மர்மங்களுக்கு கூடிய விரைவில் விடைகள் கிடைக்கும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அப்போட் (படம்) இன்று காலை அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பெர்த் நகரிலிருந்து 2,400 கிலோ மீட்டர் (சுமார் 1,500 மைல்) தொலைவில் உள்ள கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை அப்போட் நடத்தியுள்ளார்.

“தற்போது நமக்கு கிடைத்திருப்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. காணாமல் போன விமானத்திற்கு என்ன நேர்ந்திருக்கும் என்ற மர்மங்களை நாம் அவிழ்க்கக் கூடிய சரியான பாதையில் தற்போது நாம் சென்று கொண்டிருக்கின்றோம்” என்றும் அப்போட் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“மேலும் கூடுதலான கப்பல்கள், கூடுதலான விமானங்கள் நமக்கு இருப்பதால் கடல் பகுதியில் காணப்படும் பொருட்களை மீட்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது” என்று கூறிய அப்போட், “அந்த பொருட்களை நாம் மீட்டு விட்டால் என்ன நடந்தது என்பது பற்றி குறிப்பாக நாம் சொல்ல முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

அனைத்துலக நாடுகளின் கப்பல்களும், விமானங்களும் இன்று காலை முதல் பெர்த் நகரைத் தாண்டியுள்ள கடல் பகுதியில் மீண்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

அமெரிக்கக் கடற்படையின் போசிடோன் (Poseidon) என்ற போர்க்கப்பல் தற்போது தேடுதல் பகுதியைச் சென்று அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை எட்டு விமானங்கள் இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் தங்களின் தேடுதல் பணியை தொடரும். நேற்று ஆறு விமானங்கள் மட்டுமே தேடுதலில் ஈடுபட்டன.

அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளின் விமானங்கள் தேடுதல் பணியில் இறங்கியுள்ளன. இந்த விமானங்கள் பெர்த் நேரப்படி காலை 7 மணி முதலே தங்கள் பணியைத் தொடங்கிவிட்டன.

இந்த தேடுதலில் சீனத் துணைக்கோள் அண்மையில் வெளியிட்ட படங்களும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன என்றும் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.