கெய்ரோ, மார்ச் 25 – எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மோர்சி ஆதரவாளர்கள் 529 பேருக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்ற தவறியதால் எகிப்து நாட்டு அதிபர் முகமது மோர்சிக்கு எதிராக போராட்டம் நடந்தது.
இதனால், ராணுவத்தால் அவரது பதவி பறிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து மோர்சியின் ஆதரவாளர்கள் தலைநகர் கெய்ரோவில் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் காவல்துறையினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.
இது தொடர்பாக எகிப்தின் மின்யா நீதிமன்றத்தில் 545 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 16 பேரை விடுவித்த மின்யா நீதிமன்றம், 529 பேருக்கு மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. ஒரே நாளில் 529 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.