மதுரா, ஏப்ரல் 1 – நடிகை ஹேமமாலினிக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது.
பாஜவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நடிகை ஹேமமாலினி, தற்போது உ.பி. மாநிலம் மதுராவில் மீண்டும் போட்டியிடுகிறார்.
கடந்த ஒரு வாரமாக மதுராவில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு எதிராக சமூக வலைதளமான பேஸ்புக்கில் சில மர்ம நபர்கள் அவதூறு பிரச்சாரம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
போலி முகவரிகளில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹேமமாலினியின் உதவியாளர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து மதுரா மாவட்ட ஆட்சியரிடம், மதுரா மாவட்ட பாஜக தலைவர் அஜய் குமார் புகார் அளித்துள்ளார்.
மேலும் மாநில பாஜக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரா சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருவதாக மதுரா மாவட்ட சிறப்பு எஸ்பி அகிலேஷ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்தால் நடவடிக்கை நிச்சயம் என உறுதி அளித்தார்.