புதுடெல்லி, ஏப்ரல் 1 – நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக கூகுள், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு ரூ. 500 கோடி வருமானம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வரும் 7-ஆம் தேதி தொடங்கி மே 12- ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடக்கிறது.
இந்த தேர்தலின் விளம்பரங்களுக்காக மட்டும் அனைத்து அரசியல் கட்சிகளும் மொத்தமாக ரூ.500 கோடி வரை செலவழிக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 81 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதில் முதல் முறையாக வாக்களிக்க இருப்பவர்கள் மட்டும் 10 கோடி. 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்றால் அது 20கோடியை தாண்டிவிடும்.
இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சமூக வலைதளங்களான கூகுள், பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் கணக்கு வைத்திருப்பவர்கள்.
தகவல்களை இணையதளத்தில் பறிமாறி கொள்பவர்கள். இந்த இளைஞர் பட்டாளத்தை அரசியல் கட்சிகளும் தற்போது அதிக அளவில் குறிவைக்க தொடங்கியுள்ளன.
இவற்றின் முக்கியத்துவம் கருதி தேர்தல் ஆணையமும் இணையதளங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கியுள்ளது.
இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இத்தகைய சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வதற்காக அரசியல் கட்சிகள் பல நூறு கோடிகளை செலவழிக்க திட்டமிட்டுள்ளன.
இந்த வகையில் இந்திய தேர்தல் மூலம் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு ரூ.500 கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.